முல்லைத்தீவு இளைஞன் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்கவில் கைது
14 Feb,2015
டுபாய் ஊடாக இத்தாலிக்குச் செல்லவிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை கைதான நபர் கடந்த 11ஆம் திகதி இத்தாலிக்குச் செல்லும் நோக்கில் டுபாய் சென்றிருந்த போது அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
நாடு திரும்பியவுடன் அவர் ஸ்ரீலங்கா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கைது செய்யப்படும் ஐந்தாவது ஈழத்தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதேபோன்று மட்டக்களப்பைச் சேர்ந்த இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து தற்போதும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரும், ஜேர்மனை வசிப்பிடமாகவும், வடமாகாணத்தைப் பூர்விகமாகவும் கொண்ட மற்றொருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஐவர் மீதும் போலி ஆவணங்கள் சமர்ப்பித்தமை மற்றும் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளன.