இலங்கையின் அபிவிருத்திக்கு சகல உதவிகளையும் வழங்க தயார்: சீனா அறிவிப்பு
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
சீனா ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியான அந்த நாட்டு உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியாங் சோவு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகாலமாக இருந்து வரும் ராஜதந்திர உறவுகளை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பது தமது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு எனவும் சீன பிரதிநிதி ஜனாதிபதியிடம் கூறியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீன விசேட பிரதிநிதிக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
சீன விசேடப் பிரதிநிதி அந்நாட்டு துணை வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியாங் சோவு இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, அலரி மாளிகையில் சந்தித்தார்.
புதிய அரசாங்கத்திற்கு சீன ஜனாதிபதி, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக சீன துணை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்துடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சீன அரசாங்கம், இலங்கைக்கு விசேட பிரதிநிதியாக சீன துணை வெளிவிவகார அமைச்சரை அனுப்பி வைத்துள்ளது.
சீனாவின் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பிக்க உள்ளது.
எயார் சைனா விமான சேவையின் சீ.ஏ.425 இலக்க விமானம் சீனாவின் சேங்க்து விமானத்தில் இருந்து புறப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி இரவு 9.50 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.
இதனையடுத்து 10 ஆம் திகதி முதல் வாரம் தோறும் எயார் சைனா விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான 4 விமான சேவைகளை நடத்த உள்ளது.
எயார் சைனா விமான சேவையானது மக்கள் சீன அரசின் தேசிய விமான சேவையாகும்.
எயார் சைனா விமான இலங்கைக்கான சேவை ஆரம்பிப்பதை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைபவம் ஒன்று நடைபெறவுள்ளதுடன் அதில் சீன பிரதிநிதிகளும், இலங்கையின் துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் கலந்து கொள்ள உள்ளனர்.