2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா 16–ந்தேதி இந்தியா வருகிறார்
02 Feb,2015
இலங்கை அதிபர் சிறிசேனா 2 நாள் பயணமாக 16–ந்தேதி இந்தியாவுக்கு வருகிறார்.
சிறிசேனா
இலங்கையில் கடந்த 8–ந்தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை வீழ்த்தி, அரியணையில் ஏறியவர், மைத்ரிபால சிறிசேனா. அவர் பதவி ஏற்றவுடன், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாக தெரிவித்தார்.
இதற்கேற்ப, இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, இந்தியாவுக்கு வந்து பேச்சவார்த்தை நடத்தினார்.
16–ந்தேதி வருகை
இந்நிலையில், புதிய அதிபர் சிறிசேனாவும் இந்தியாவுக்கு வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக 16–ந்தேதி அவர் இந்தியாவுக்கு வருகிறார்.
இந்தியாவில் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
இந்தியா–இலங்கை அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்த தேதி இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இது, பதவி ஏற்ற பிறகு, சிறிசேனா மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் ஆகும்.
மோடி பயணம்
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 13–ந்தேதி முதல் 15–ந்தேதிவரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அப்போது, அவர் தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தெரிகிறது.