இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் வன்முறைகள் குறித்து ஐ.நா கரிசனை .
.
இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் அரசாங்கம் காத்திரமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக், இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் வன்முறைகள் தொடர்கின்றன. எனவே அங்கு நல்லிணக்கம் அவசியமானது. அத்துடன் அரசாங்கம் நியாயமான தேர்தல் ஒன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இதன்போது சிறுபான்மையினர் தொடர்பில் கவனம் தேவை என்றும் துஜாரிக் குறிப்பிட்டார்.
இதேவேளை நியாயமான தேர்தல் ஒன்றுக்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
.
நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எவரேனும் தேர்தல் சட்டங்களை மீறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கவோ அல்லது, வன்முறைகள் தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவை நடத்தவோ தயங்கமாட்டேன் என்று இலங்கை தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நேற்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து, நீதியான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு கோரியிருந்தனர்.
எதிரணித் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கரு ஜெயசூரிய, ரவி கருணாநாயக்க ஆகியோரை இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன்போது அரசதரப்பினால், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது குறித்த பல்வேறு முறைப்பாடுகளை எதிரணித் தலைவர்கள், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் முன்வைத்திருந்தனர்.
இதையடுத்தே, வன்முறைகள் தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவும் தங்கமாட்டேன் என்று, தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.