மண்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்:
29 Oct,2014
மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த தகவலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று பின்னிரவு வெளியிட்டுள்ளார்.
எனினும் அரசாங்க புள்ளிவிபரத் தகவல்களின்படி 350 பேர் வரை மண்சரிவுக்குள் அகப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சீரற்ற காலநிலையால் நேற்று மாலை நிறுத்தப்பட்ட மண்சரிவு மீட்புப்பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மீரியபெத்த மக்களுக்கு உதவப் போவதாக இந்தியா அறிவிப்பு
பதுளை கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸூடன் தொடர்புக்கொண்டு இந்த தகவலை வழங்கியுள்ளார்.
இதன்போது இந்தியாவின் உதவி அறிவிப்புக்கு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இன்று பெரும்பாலும் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு செல்வர் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.
பேதமின்றி மீரியபெத்த மக்களுக்கு உதவுங்கள்: ரணில்
இன மதபேதமின்றி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு உதவ இலங்கையர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து எமது சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்.
உதவியற்ற மக்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமை என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.