எண்பதுகளில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமைகளை தற்போது கனடா எதிர்கொள்கிறதாம்! கோத்தபாய
23 Oct,2014
1980 களில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமைகளை கனடா தற்போது எதிர்நோக்கி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொன்டரயல் மற்றும் ஒட்டாவா ஆகிய இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் இரண்டு படைவீரர்களும் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்ததற்கு நிகரான வகையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினர் இலங்கையின் பயங்கரவாத அச்சுறுத்தல்களை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடை நீக்கத்தை உன்னிப்பாக அவதானிக்கிறதாம் புலனாய்வுத்துறை!
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள புதிய சூழல் தொடர்பில் பாதுகாப்பு படைத்தரப்பு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியதை அடுத்து ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள் தொடர்பில் புலனாய்வுத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கத்தால், மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீளக்கட்டியெழுப்பப்படுவதற்கு குறைந்தபட்ச வாய்ப்புகளே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பிரிவினைவாதிகளுக்கு வழங்கிவிடக் கூடாது என்பதால் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து பிரிவுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் வணிகசூரிய தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கம் தற்காலிகமானதாகவே இருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் நிரந்தரமாக நீக்கப்படுமானால் அது நாட்டின் அமைதிக்கு பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளார்