மூதூரில் முதலை தாக்குதலுக்கு இலக்காகிய மீனவர் வைத்தியசாலையில்
23 Oct,2014
மூதூரில் மீனவர் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி மூதூர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முதலைக் கடிக்கு இலக்கானவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையான சாபி நகரைச் சேர்ந்த சாகுல்ஹமீது மாகில் (வயது 50) என தெரிவிக்கப்படுகின்றது.
வேதத்தீவு சாபிநகர் இப்றாகிம் துறை ஆற்றுப்பகுதியில் இறால் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இடம்பெற்றுள்ளது.
வலது கால் பகுதியில் பலத்த காயத்துக்குள்ளான நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது மழை வெள்ளம் அதிகரித்துள்ளதனால் குளங்களிலிருந்து முதலைகள் ஆற்றுப்பகுதிக்கு வந்திருக்கக் கூடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.