தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்திய- இலங்கை உறவில் பொற்காலம் தோன்றியிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும், மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த குதூகலத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா இருக்கும் வரை இலங்கை தொடர்பான விடயங்களில் அநாவசியமாகத் தலையிட்டுக் கொண்டே இருந்தார்.
இலங்கை தொடர்பான விடயங்களில் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இலங்கை தொடர்பாக அவர் அளித்த ஆலோசனைகள் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளன.
இங்குள்ளவர்களை சிறையில் அடைக்க அவர் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அவரே சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு இந்திய ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கக் கூடாது என்பதே எங்கள் கருத்தாகும்.
ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனை மூலம் இந்திய- இலங்கை உறவில் இருந்த தடை அகன்று விட்டது.
இரு நாடுகளின் உறவில் பொற்காலம் மலர்ந்துள்ளது என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்
ஜெயலலிதா புலிகளுக்கு தங்கம் வழங்கியதாக திவயின புதிய குற்றச்சாட்டு
தமிழக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தங்கம் வழங்கியதாக இலங்கை அரசு ஆதரவு சிங்களப் பத்திரிகையான திவயின குற்றம் சுமத்தியுள்ளது.
ஜெயலலிதா நூறு கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை புலிகளுக்கு கடந்த காலங்களில் வழங்கியிருந்ததாக புலிகளுக்கு எதிரான தரப்பினர் கண்டறிந்துள்ளதாக பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொக்டர் சீ.பிரேமசந்திரன் என்பவரினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தஞ்சாவூரில் நினைவுத் தூபி அமைப்பதற்கு ஜெயலலிதா அனுமதி வழங்கியதாகவும் திவயின குற்றம் சுமத்தியுள்ளது.
பீ.நெடுமாறனினால் ஜெயலலிதா சார்பில் புலிகளுக்கு தங்கம் வழங்கியதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சனம் செய்ததுடன் பல தடவைகள் புலிகளினால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் திவயின பத்திரிகை ஜெயலலிதா மீது புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
எந்தக் காலப்பகுதியில் எவ்வாறு புலிகளுக்கு தங்கம் வழங்கப்பட்டது போன்ற விபரங்களையோ ஆதாரங்களையோ திவயின பத்திரிகை வெளியிடவில்லை.
நூறு கிலோ கிராம் கிடையுடைய தங்கத்தை வழங்கியதாக வெறுமனே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது