யாழ்தேவி ரயில் வெள்ளோட்டத்தைப் பார்க்க ஓடிய சிறுமியை விஷப் பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
நுணாவில் மேற்கைச் சேர்ந்த மகிந்தன் பதுமிகா (வயது-7) என்ற சிறுமியே இவ்வாறு பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துக் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி தனது பெற்றோருடன் நெல்விதைப்பு நடவடிக்கையைப் பார்வையிட வயலுக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, வயலில் நின்ற சிறுமி பரீட்சார்த்த ரயில் வருவதைக் கண்டு அதனைப் பார்ப்பதற்காக வரம்பு வழியே ஓடியபோது அதில் படுத்திருந்த புடையன் பாம்பு அவரது காலில் தீண்டியுள்ளது.
இன்று யாழ்.நகரை வந்தடைந்தது யாழ்தேவி
பளை - யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று ஆரம்பமாகியது.
பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு யாழ். தேவி வந்தடைந்துள்ளது.
யாழ் தேவியின் வருகையை காண்பதற்காக யாழ். குடா நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான மக்கள் யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
ரயில் சேவை ஆரம்பமாகியதை அடுத்து இரு மருங்கிலும் நின்று பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
கொழும்பு - யாழ். ரயில் சேவை ஒக்டோபர் 13ல் ஆரம்பம்
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஓமந்தை, பளை, கிளிநொச்சி வரை படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது யாழ்ப்பாணம் வரை சேவை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை விஸ்தரிக்கும் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு பளையிலிருந்து ஆரம்பமாகும் பரீட்சார்த்த புகையிரதம், 10.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும் என புகையிரத திணைக்களம் தெரிவித்தது.
தொடர்ந்து ஒக்டோபர் 13ம் திகதி யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்தது.