போர்க்குற்றங்களை புரிய உத்தரவிட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: மனித உரிமைச் சபையில் கரன் பார்கர் அம்மையார்
14 Sep,2014
போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் புரிய உத்தரவிட்ட மேலிடத்தவர்கள் தண்டிக்கப்படுதல் அவசியம் என மூத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரன் பார்கர் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுப் பிரதிநிதியும், ஐ.நா மனித உரிமைச்சபை வள அறிஞர் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அவர்கள் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச்சபை 27வது கூட்டத் தொடரிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
உண்மை, நீதி, ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல், தண்டித்தல் மற்றும் மீள நிகழாமல் தடுத்தல் ஆகிய விடயங்களுக்கான ஐநா மனித உரிமைச் சபையின் சிறப்பு ஏற்பாட்டாளர் (Special Rapporteur) DeGreiff அவர்களது அறிக்கை தொடர்பிலான விவாதத்திலேயே இக்கருத்தினை கரன் பார்கர் பதிவு செய்துள்ளார்.
போதிய கல்வி, மனித உரிமைகள் தொடர்பிலான தெளிவு போன்ற பல்வேறு நெறிமுறைகள் பற்றி அறியாதவர்களை, சண்டைக் களங்களுக்கு என திரட்டி, களங்களுக்கு அனுப்பப்படும் கீழ்நிலைச் சிப்பாய்களை தண்டிப்பது என்பதற்கு அப்பால் சென்று, உத்தரவுகளை பிறப்பிக்கின்ற மேல்நிலை உயர்மட்டத்தில் உள்ளவர்கள் தண்டிக்கப்படும் போதுதான் பாரிய மனித உரிமை மீறல்கள் மீளநிகழாமல் தடுக்க முடியும்.
சிங்கள தேசத்தில் ஆட்சி பீடமேறிய ஒவ்வொரு அரசாங்களை தலைதாங்கி நடத்தியவர்கள், ஈழத்தமிழினத்தின் மீது மேற்கொண்ட இனப்படுகொலையினைத் தலைமை தாங்கி யவர்கள் என்ற வகையில்,
சிறிலங்கா அரசின் தற்போதைய தலைவர் மகிந்த ராஐபக்ச, முன்னாள் அரசுத் தலைவர் உட்பட பன்னிருவர்கள் பெயர்களை பட்டியலிட்டு, இனப்படுகொலையாளிகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையார் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மனித உரிமைச்ச பையில் கரன் பார்கர் அம்மையாரின் இக்கூற்று முக்கியத்துவம் பெறுகின்றது.