தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டுமென்ற எண்ணமே அரசாங்கத்திடம் இல்லை: த.கலையரசன்
தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை இந்த அரசாங்கத்திடம் இல்லையென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருந்து வாழவைப்போம் அமைப்பினரால் வழங்கப்பட்ட ஒரு தொகை பணத்தினை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது, பொத்துவில் குண்டு மடு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரன், ஆலயத் தலைவர், மாகாணசபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் பா.புவிராஜா மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக பொத்துவில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாகவும், சுனாமி அனர்த்தம் காரணமாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய இரண்டு சமூகங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வாழும் சமூகம் இவ்வாறு இன்னல்பட்டு வாழும் தமிழ் சமூகத்திற்கு இந்த நாட்டு அரசாங்கத்தினால் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மாறாக அவர்கள் வாழும் இடங்களை சூறையாடுவதிலும், அவர்களை தன்மானத்துடன் வாழவிடாமல் தடுப்பதிலுமே குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.
வடகிழக்கு மாகாணங்களிலே எமது உறவுகள் சொல்ல முடியாத துன்பதுயரங்களை தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலே தமிழர்கள் தமிழர்களாக வாழமுடியாது என்ற நிலைமையை உருவாக்கியது இந்த அரசாங்கம். இதற்காகவே நாங்கள் போராட்ட வடிவங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்தது.
ஆனால் எந்தத் தீர்வினையும் வழங்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை இந்த அரசாங்கத்திடம் இருக்கவில்லை.
அதனால்தான் த.தே.கூட்டமைப்பு இன்று ஜனநாயக ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் போராட்ட வடிவங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம்.
இந்த நாட்டு அரசாங்கத்திடம் தமிழர்களுக்கான முழுமையான எந்தத்தீர்வினையும் வழங்குவதற்கான எந்தத்தீர்வுத்திட்டமும் இல்லை. எப்படியாவது காலத்தை இழுத்தடித்து தமிழர்களது இருப்பை இல்லாமல் செய்வதே இவர்களது முழு நோக்கமாக இருக்கிறது.
தமிழர்கள் இந்த நாட்டிலே பூர்வீகமாக வாழ்ந்தவர்கள் என்பதனை மறைப்பதற்காக வேண்டி பல வேலைத் திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் அனைத்தையும் எமது சமூகமும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே நாங்களும் ஜநனாயக ரீதியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
கிழக்கு மாகாணசபை மூன்று சமூகங்களையும் உள்ளடக்கியது என்றும் வாயளவில் பேசுகின்றார்கள். ஆனால் தமிழினத்திற்கு அநீதியான விடயங்களே இங்கு நடக்கின்றன.
மாகாணசபையிலே நடந்து கொண்டிருப்பதெல்லாம் அவர்களது இனம் சார்ந்த, கட்சிசார்ந்த முன்னெடுப்புக்களே அன்றி, எங்களுடைய பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எந்த விடயத்தினையும் மாகாண சபையினூடாக அவர்கள் தயாரில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றது.
மாகாண சபைகளினூடாக எந்த ஒரு வேலைத் திட்டத்தினையும் முன்னெடுப்பதற்கு இந்த அரசாங்கம் முன்வரவில்லை என்பது யதார்த்தமான உண்மை என்பதனை அவர்களே வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
வடமாகாண சபையினை எடுத்துக்கொண்டால் இங்குள்ள முதலமைச்சர் எந்த அதிகாரமும் அற்றவராகவே இருந்து கொண்டிருக்கின்றார். இதுதான் இந்த நாட்டின் ஜநனாயகம்.
பிரதேச செயலகங்களூடாக பல அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தாலும், தமிழ்ப் பிரதேசங்களை பொறுத்த வரையில் மாற்றான் மனப்பாங்கோடுதான் சகல விடயங்களையும் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலைமையை அரசாங்கம் மாற்ற வேண்டும் அப்போதுதான் சகல இனங்களும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ முடியும்.
தமிழர்கள் தமிழர்களாக வாழவேண்டும் என்பதற்காகவே த.தே.கூட்டமைப்பு இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றது. எங்களது இனத்தின் விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களின் கரத்தினை பலப்படுத்துவது உங்களது கடமையாகும் என்றார்.
இலங்கையை சேர்ந்த 10 மீனவர்கள், தமிழக கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையிலிருந்து வடகிழக்காக 70 மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பத்து மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் அத்துமீறி பிரவேசித்து மீனவர்கள் பிடித்த 4200 கிலோ எடை உள்ள டூனா மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் சந்தேகப்படும்படி யாராவது நடமாடுகிறார்களா என கடற்படையினர் தீவிரமாக ரோந்து சுற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
அதே போல் கடலில் தத்தளிக்கும் மீனவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
வென்னப்புவ பிரதேசத்தில் இளைஞர் கொலை
சிலாபம், வென்னப்புவ கிரிகம்பல பிரதேசத்தின் பெலவத்த சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. வென்னப்புவ பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.