.
18வது அரசியல் அமைப்பு திருத்த சட்டத்தின் குறைபாடுகள் காரணமாக மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமுடியாது என
முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தொழில்சார் அமைப்புகளும் கூடிய கவனத்தை செலுத்தி வருகின்றன.
அத்துடன் இந்த பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது.
18வது திருத்த சட்டத்திற்கு அமைய மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்ஷ, மூன்றாவது தடையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டால், வழக்கு தொடரப்படும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உரிமை இருப்பதாக அரசாங்கத்திற்கு ஆதரவான சிரேஷ்ட சட்டத்தரணியான கோமின் தயாசிறி கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாகவும் இதனால், மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வாதங்களை தற்போது வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக போட்டியிட முடியும் மற்றும் முடியாது என்று வாதங்களை முன்வைக்கப்பட்டாலும் நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ள வேண்டிய பாரதூரமான பிரச்சினை ஒன்று இருப்பதாக தோன்றுகிறது.
சாதாரணமான இப்படியான சிக்கல்களை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் திருத்தங்கள் மூலமே அரசாங்கம் திருத்திக்கொள்ள வேண்டும்.
ஆனால், அரசாங்கம் அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள அக்கறை செலுத்தாமல் இருப்பது சட்டதுறையினரின் சந்தேகங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இப்படியான சந்தர்ப்பங்களில் உயர்நீதிமன்றம் சட்ட விளக்கங்களை வழங்க முடியும் என்றாலும் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலம் ஒன்றில் குறைபாடுகள் இருக்குமாயின் 18வது அரசியல் அமைப்புத் திருத்த சட்டத்தை மீண்டும் திருத்தி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்ளுமாறு அறிவிக்க மாத்திரமே நீதிமன்றத்திற்கு முடியும்.
எது எப்படியிருந்தாலும் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு மகிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டால், அரசாங்கத்தின் புதிய வேட்பாளருடன் 2016 ஆம் ஆண்டே ஜனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டிய நிலைமை ஏற்படும்
ஐ.நா விசாரணையை நிராகரிக்கிறோம்! மனித உரிமை கூட்டதொடரில் இலங்கை கருத்து
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடரின் துவக்கத்தில் இலங்கை சார்பாக உரையாற்றியுள்ள மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதர் ரவிநாத ஆரியசிங்க, இலங்கையில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்துவதற்குப் பணித்திருந்த ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தையும், ஐநா மனித உரிமை அலுவகம் நடத்தக்கூடிய விசாரணையையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானமும், அந்த தீர்மானத்தின் வழியாக ஐநா மனித உரிமையாளர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும், இலங்கையின் இறையாண்மையையும் சர்வதேச சட்டங்களையும் மீறுவதாக உள்ளது என ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க கூறியிருந்தார்.
இலங்கையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் குலைப்பதாக இந்த தீர்மானமும் விசாரணையும் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விசாரணை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வாய்வழியாக தகவல் வழங்கும்போது, அது பற்றிய கூடுதல் விவரங்களை இலங்கை தெரிவிக்கும் என்று ஆரிய சிங்க தெரிவித்தார்.
ஐநா மனித உரிமை மன்ற தீர்மானத்தையும் அதன் வழியாக வருகின்ற விசாரணையையும் இலங்கை நிராகரித்தாலும் உள்நாட்டளவில் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார்.
ஐநா மனித உரிமை கவுன்சிலின் முந்தைய கூட்டத்தொடர் கடந்த ஜூனில் நிறைவடைந்ததற்கு பிற்பாடு, இலங்கையில் நல்லிணக்கத்துக்கான விசேட துறை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும் காணாமல்போனவர்கள் பற்றிய விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும், குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்று அமைப்பட்டிருப்பதையும் ரவிநாத ஆரியசிங்க சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடப்படுவதாக கூறப்படுவதை இலங்கை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார். எல்லா நேரங்களிலுமே புகாரிகள் உரிய முறையில் விசாரிக்கபடுவதாகவும், அரசியல் சாசனம் உத்தரவாதம் வழங்கும் நிவாரண நடவடிக்கைகள் மனித உரிமை ஆர்வலர்களுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை நெடுங்காலமாகவே பல்வேறு மத இனக் குழுக்கள் சமாதானத்துடன் வாழ்ந்த ஒரு பூமி என்றும், ஆனாலும் அங்கே மதக் குழுக்கள் இடையிலான ஒரு சில வன்சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், அவை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மன்னெடுக்கப்படுவதாகவும், மதக் குழுக்களுக்கு எதிரான வன்முறையை அரசாங்கம் கண்டித்துவருவதாகவும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடர் தொடக்கத்தில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னதாக புதிய ஆணையாளர் தனது துவக்க உரையில் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இலங்கை சம்பந்தமாக நடத்துகின்ற விசாரணை அறிக்கையை தாம் எதிர்பார்த்திருப்பதாக மனித உரிமை கவுன்சிலுக்கான அமெரிக்காவின் தூதர் கீத் ஹார்ப்பர் கூறியிருந்தார்.
இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஐநா அதிகாரிகள் இலங்கையில் வந்து எவ்வித அச்சுறுத்தலோ தடையுமோ இன்றி விசாரணைகளை நடத்த இலங்கை அரசு வழிவிட வேண்டுமென மனித உரிமை கவுன்சிலுக்கான பிரிட்டிஷ் தூதர் கரென் பியர்ஸ் கூறியிருந்தார்