“சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி” முறையே, தமிழர்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தரும்! வினோ எம்.பி சொல்கிறார். - இது எப்பிடி இருக்கு? (ஆதாரம்: Voice Record இணைக்கப்பட்டுள்ளது.)
கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போய் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நேற்று (30.08.2014 அன்று) வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடும் உறவுகளின் இணையத்தினதும், வடமாகாண பிரஜைகள் குழுக்களினதும் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,
“இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்று ஒரு சாராரும், ஆட்சி மாற்றம் தேவை என்று மற்றுமொரு சாராரும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ அரசாங்கமும், அவரிடமுள்ள நிறைவேற்று அதிகார முறைமையும் இருக்கும் வரையில் தான், எமக்கான தீர்வை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
நிறைவேற்று அதிகார அல்லது “சர்வாதிகாரத்தனமான ஒரு ஜனாதிபதி” ஆட்சி முறை இருக்கின்ற போதே, எமக்கான நிரந்தர அரசியல் தீர்வை மட்டுமல்ல, காணிகள் அபகரிக்கப்படுகின்ற விடையங்கள், தடுப்புக்காவலிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் இன்றுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் விடிவைக்காண முடியும்.” என்று தனது உரையில் அழுத்தமாக வலியுறுத்திக்கூறினார்.
குறித்த நிகழ்வில் தென்னிலங்கையிலிருந்து மட்டும் இருநூறுக்கும் மேல்பட்ட சிங்கள, முஸ்லிம் இன மக்கள் கலந்து கொண்டு, தமது பிள்ளைகள் மற்றும் உறவுகள் கடத்தப்பட்டு காணாமல் போனமைக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் காரணமல்ல, மகிந்தராஜபக்ஸ அரசாங்கமே முழுவதும் காரணம் என்று தமது துயரப்பகிர்வை (வாக்குமூலம்) மிகத்தெளிவாக பதிவு செய்திருந்தனர்.
மகிந்தராஜபக்ஸவின் அடக்குமுறைகள், வன்முறைகள், சர்வாதிகார போக்குகள், அநீதிகளுக்கு எதிராகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராகவும் பலமாக கண்டனக்குரல்களை எழுப்பி நீதி கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழ், சிங்கள, முஸ்லிம் இன மக்களும், பிறிட்டோ பெர்ணான்டோ, நிமல்கா பெர்ணான்டோ, ஜயதிலக்க பண்டார உள்ளிட்ட சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்களும், சர்வ மதத்தலைவர்களும் கலந்துகொண்டு, மகிந்த அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமது எதிர்ப்பை கண்டனத்தை வெளிப்படுத்திய குறித்த நிகழ்வில்,
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் (வினோ), “சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி” முறையே, தமிழர்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தரும்! என்று கூறியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வினோ எம்.பியின் உரையின் ஒலி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது. அதைக்கேட்டு நீங்களும் அவரிடம் அரசியல் பாடம் கற்றுவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், விளக்கங்கள் தேவைப்பட்டால், +094 7169 13069, +094 232222 100, +94 242222 977 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழையுங்கள்.
முக்கிய கவனத்துக்கு:
எவ்வேளையிலும் வினோ எம்.பியின் கைப்பேசி Switch Off (+094 7169 13069) இல் இருக்கும். அவருடன் ஏழை எளிய மக்கள் அவ்வளவு இலகுவில் தொடர்பு கொண்டு பேசிவிட முடியாது. அவர் விரும்பிய நேரம், தேவைப்பட்ட நபர்களுக்கு மட்டும் தொடர்பினை ஏற்படுத்தி பேசிவிட்டு மறுபடியும் கைப்பேசியை Switch Off இல் வைத்துக்கொள்வார்.
-கவரிமான்-