இலங்கைக்கு அளித்த வாக்குறுதியை நரேந்திர மோடி மீறியுள்ளார்?
24 Aug,2014
இலங்கை அரசாங்கத்திற்கு அளித்த வாக்குறுதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முதலில் சந்திப்பு நடத்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு முன்னதாக அரசாங்கப் பிரதிநிதிகளை சந்திப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார்.
எனினும், இந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.
அரசாங்கப் பிரதிநிதிகளை சந்திப்பதாக வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்தமை அனுமதிக்கக் கூடியதல்ல.
எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சு எதிர்ப்பை வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் சந்திப்பு நடத்த மாட்டார் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இலங்கை ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணிய சுவாமியின் இந்த அறிவிப்பை விடுத்து 24 மணித்தியாலத்திற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பித்திருந்தனர்.