இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்தாலும், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தக்கருத்தை தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் விசாரணைக்குழு, இலங்கைக்கு வர வீசா வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று முதல் தடவையாக அறிவித்தார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் அவசியமில்லை. உள்ளுர் விசாரணைகள் போதுமானது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மக்கள் விரும்பாவிட்டால் ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் யாருக்கும் தேவையில்லை என்று மஹிந்த வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் இலங்கைக்குள் செல்ல தமது குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், இணையத்தள வசதிகளுடனும் செய்மதி வசதிகளுடனும் விசாரணைகளை நம்பகத்தன்மையுடன் முன்னெடுக்க முடியும் என்று நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிரியாவில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும், அந்த நாட்டில் முறையான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்க முடிந்ததாக நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புபட்ட செய்தி
போர்க் குற்ற விசாரணையாளர்களுக்கு வீசா வழங்கப்போவதில்லை- மஹிந்த ராஜபக்ச முதன்முறையாக அறிவிப்பு
விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன் கோரிக்கை
இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் அங்கு நல்லிணக்கத்துக்கு வழியேற்படுத்தும். எனவே அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளால் அமைக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்குழுவின் விசாரணைகளை பான் கீ மூன் ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் ஐக்கிய நாடுகளின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்கி மனித உரிமைகளை பாதுகாப்பதுடன் இறுதி சமாதானத்துக்கும் வழியேற்படுத்த வேண்டும் என்று டுஜாரிக் தெரிவித்துள்ளார்.