சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்தால் மட்டுமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பாராம்.
இவ்வாறு கூறியிருக்கிறார், பாஜகவின் பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி.
கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய, சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்கும் அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிடுகையில்,
“வழக்கமாக, எந்தவொரு நாட்டு அரசாங்கத்துடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் தரப்புகளுடனான சந்திப்புகளை நாம் ஊக்குவிப்பதில்லை.
தற்போதைய பிரதமர், சந்திப்புக்கான நியமனங்களை இலகுவாக வழங்குவதில்லை .
சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் செயல்முறைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
அந்த செயல்முறைகளைப் பலவீனப்படுத்தும், எந்த நடவடிக்கையையும் இந்தியா மேற்கொள்ளாது.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த நேரத்திலும் வந்து, பிரதமரைச் சந்திப்பதற்கு, கடந்தமுறை போல இப்போது இருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நொவம்பரில் சுஸ்மா, ஜனவரியில் மோடி, சிறிலங்காவுக்குப் பயணம் – இந்திய ஊடகம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதமும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வரும் நொவம்பர் மாதமும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் பயோனியர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
35 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி விளங்குவார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பில் சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில், சிறிலங்கா அரசாங்கத்தின் உயரதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடைசியாக, 1979ம் ஆண்டு, இந்தியப் பிரதமராக இருந்த மொராஜி தேசாய், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வரும், நொவம்பர் மாதம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரியவருகிறது.
கடந்த மாதம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசைச் சந்தித்த போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதற்கு இணங்கியிருந்தார் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்றும், பயோனியர் நாளிதழ் செய்தி வெளியிடுள்ளது.