மூன்று முக்கிய ஆசிய நாடுகளின் தலைவர்கள், அடுத்த சில மாதங்களில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே அடுத்த மாதம் 9ம் நாள் உரையாற்றவுள்ளார்.
அதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பின் சிறிலங்கா வரவுள்ளார்.
அவர், வரும் செப்ரெம்பர் 18ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.
எனினும், அவரது உரை நாள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம், சிறிலங்காவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரும் கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இதுவரை எட்டு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதலாவது வெளிநாட்டுத் தலைவர், முன்னாள் சீன அதிபர் சூ என்லாய் ஆவார். இவர் 1957ம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
அதையடுத்து, 1962இல், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், 1963இல் பாகிஸ்தான் பிரதமர் பீல்ட் மார்ஷல் முகமட் அயூப் கானும், 1973இல், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், 1975இல் பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவும், 1979இல் இந்தியப் பிரதமர் மொராஜி தேசாயும், 1985இல், பிரித்தானியப் பிரதமர் மார்கிரட் தட்சரும், 2003இல் தாய்லாந்து பிரதமர் தக்சின் சின்வத்ராவும், 2013இல்,அவரது தங்கையும் தாய்லாந்துப் பிரதமருமான ஜிங்லுக் சின்வத்ராவும், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு, பாகிஸ்தான் அதிபர்களாக இருந்த ஜெனரல் ஷியா உல் ஹக் 1985இலும், ஆசிப் அலி சர்தாரி 2011இலும், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்த போதும் உரையாற்றவில்லை.
சிறிலங்கா அரசியல் நிலவரத்தை ஆய்வு செய்கிறது இந்தியா – கொழும்பு ஊடகம்
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியா ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டுத் துவக்கத்தில், சிறிலங்கா அதிபர் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட விரும்பும்,சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, கரு ஜெயசூரிய போன்றவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக, தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகள் முடியும் வரையில், இவர்களுக்கு சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்படாது என்று தெரிகிறது.
இந்தியா மேற்கொள்ளும் ஆய்வில், தகுதியான பொதுவேட்பாளர் யார் என்பது தெரிய வந்த பின்னரே, புதுடெல்லிக்கு அவரை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.