சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு, அனைத்துலக முதலீட்டாளர்களிடம் இருந்து கேள்விப்பத்திரங்களைக் கோர சிறிலங்கா மின்சார சபை முடிவு செய்துள்ளது.
சம்பூர் அனல் மின் நிறுவனம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள, இந்த திட்டத்தில், இந்தியாவின் தேசிய அனல் மின் கழகமும், சிறிலங்கா மின்சார சபையும் சம அளவில் முதலீடு செய்வதாக புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே, சிறிலங்கா மின்சாரசபை தனது, பங்கிற்கு முதலீடு செய்யவுள்ள நிதியின் ஒரு பகுதியையே வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர், அனல் மின் நிலைய கட்டுமானத்தின் 70 சதவீதத்துக்கான கடனை வழங்குவார் என்று சிறிலங்கா மின்சார சபைத் தலைவர் கணேகல தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கட்டுமானச் செலவின் 15 வீதத்தை ஈடுசெய்வதற்கு, மின்சார சபை வெளிநாட்டுக்கடனையும் பெறவுள்ளது.
500 மெகா வாட்ஸ் திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதும், இதுதொடர்பாக இந்திய நிறுவனத்துடன் இன்னமும் பேச்சுக்கள் நடத்தப்படவில்லை.
இந்த அனல் மின் திட்டத்துக்கு 600 மில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துலகச் சட்டங்களை மீறுகிறது சிறிலங்கா – ஐ.நா குற்றச்சாட்டு
அனைத்துலகச் சட்டங்களை சிறிலங்கா மீறுவதாக, அகதிகளுக்கான ஐ.நா உயர்ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
நியாயமான விசாரணைகளின்றி பாகிஸ்தானிய அகதிகளை சிறிலங்கா திருப்பி அனுப்புவதாக அகதிகளுக்கான ஐ.நா உயர்ஆணையப் பேச்சாளர் அட்றியன் எட்வேர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
அடிப்படையில், பலவந்தமாகத் திருப்பி அனுப்புவதில்லை என்ற கோட்பாட்டை இது மீறுகிறது.
இது அனைத்துலகச் சட்டங்களைத் தெளிவாக மீறுகின்ற செயலாகும்.
அகதிகள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்படுவது குறித்து கவலை கொண்டுள்ளோம்.
அவர்கள் நாடுகடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
11 பெண்களும், 8 குழந்தைகளும் கூட திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சில குடும்பங்கள் தனியாகப் பிரித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.
கடந்த முதலாம் நாளுக்குப் பின்னர், 88 பாகிஸ்தானிய அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு. மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக ராஜபக்சே கூறியுள்ளார்.
வீசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டு தம்பதிக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்
வீசா முடிவடைந்த நிலையில், இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
இவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதவான் திலின கமகே, அபராத தொகையை செலுத்திய பின்னர், சந்தேக நபர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த போது, பொலிஸார் அவர்களை சோதனைக்கு உட்படுத்தினர்.
விசாரணைகளின் போது, இவர்களின் வீசா அனுமதி முடிந்து பல மாதங்கள் கடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.