அடைக்கலம் தேடிய 2115 வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்புகிறது சிறிலங்கா
08 Aug,2014
சிறிலங்காவில் அடைக்கலம் தேடியுள்ள 2115 வெளிநாட்டவர்களை, திருப்பி அனுப்பும் நடவடிக்கையில், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் பாதுகாப்பில் சிறிலங்காவில் தங்கியுள்ள இவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு, 60 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
நுழைவிசைவு இல்லாமல் தங்கியிருந்த 69 பாகிஸ்தானிய மற்றும் 16 ஆப்கானிஸ்தான் அகதிகளை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப நேற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இவர்களுக்கான பயணச்சீட்டு மற்றும் உணவுச்செலவுகளை சிறிலங்கா குடிவரவு குடியகல்வுத் திணைக்களமே பொறுப்பேற்றுள்ளது.
அதேவேளை, மீரிஹானவில் உள்ள தடுப்பு முகாமில், 88 பாகிஸ்தானியர்களும், 70 ஆப்கான் நாட்டவர்களும், 2 ஈரானியர்களும் உள்ளிட்ட 160 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 30ம் நாள், அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம், சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் கையளித்த அறிக்கை ஒன்றில், 1562 வெளிநாட்டவர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் 308 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து வரும் அகதிகளைத் தடுப்பதற்காக, விமான நிலையத்தில் வைத்து வழங்கப்படும், இந்த நாடுகளுக்கான வருகை நுழைவிசைவு முறை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
புலனாய்வுப்பிரிவின் விசாரணைகளின் பின்னரே அவர்களுக்கான நுழைவிசைவு வழங்கப்பட்டு வருகிறது.