சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுதொடர்பான சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள போதிலும், அதில் எப்போது அந்தப் பயணம் இடம்பெறும் என்று குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக, வரும் 21ம் நாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாகிஸ்தான் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னமும் உறுதிப்படுத்தாத காரணத்தினால், இந்தப் பயணத் திட்டங்களில் மாற்றங்கள் ஏதும் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.
சிறிலங்கா அதிபரின் பாகிஸ்தான் பயணம் தொடர்பான, ஏற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சேனுகா செனிவிரத்ன பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அவர் அங்கு சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள பேச்சுக்கள் மற்றும் அவரது பயணத்தின் போது கையெழுத்திடப்படவுள்ள உடன்பாடுகள் குறித்த இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் .
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவு காணப்படுகின்ற போதிலும், புதுடெல்லியின் தலையீடு மற்றும் சிறிலங்காவின் நடவடிக்கைகளால் இருதரப்பு உறவுகளில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
கோத்தாவின் அரசியல் பிரவேசம் – மகிந்தவின் நழுவலான பதில்
அரசியலில் பிரவேசிப்பது தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் இருந்து தமக்கு எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடந்த ஊடக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச அரசியலில் பிரவேசிப்பதற்கு சாத்தியம் உள்ளதா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,
அவரிடம் இருந்து அத்தகைய கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், முன்னர் தாம் இதுபற்றி விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்து விட்டார் என்றும் தெரிவித்தார்.
எனினும், அண்மைக்காலமாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஊடகங்களுக்கு அளித்த பல செவ்விகளில், சிறிலங்கா அதிபர் அழைத்தால், தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனைக் குழுவில் இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் நிபுணர் – மகிந்த அழைப்பு
காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவில், ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இடமளிக்கப்படவுள்ளது.
அலரி மாளிகையில் ஊடக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின் போதே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலைமையிலான இந்த ஆலோசனைக் குழுவில் ஏற்கனவே மூன்று வெளிநாட்டு நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் ஒருவர் அமெரிக்கா, இருவர் பிரித்தானியர்களாவர்.
இந்த நிபுணர் குழு நியமனம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் விசனம் எழுந்துள்ளது.
இந்தநிலையில், ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சார்பில், ஒரு நிபுணரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, மூன்று சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்ட போது ஜப்பானைச் சேர்ந்த ஒருவரையும் அதில் உள்ளடக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஜப்பானியத் தூதரகத்தினால், நிபுணர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதனை உள்ளடக்காமலேயே முதலாவது நிபுணர் குழு வெளியிடப்பட்டது.
இது ஜப்பானிய தூதரக அதிகாரிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்படவுள்ள நிபுணர்களில், ஜப்பான் மற்றும் இந்திய பாகிஸ்தான் நிபுணர்கள் உள்ளடக்கப்படவுள்ளனர்.
எனினும், இந்த நிபுணர்கள் எவரும் விசாரணைகளில் பங்கெடுக்கவோ, அதில் தலையிடவோமாட்டார்கள் என்றும் சிறிலங்கா அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.