கொழும்புடன் வைத்துள்ள பொருளாதார உறவுகளின் மூலம், புவிசார் அரசியல் பதற்றத்தை சீனா உருவாக்கக் கூடாது என்பதே இந்தியாவின் கரிசனையாக உள்ளது என்று, பாஜகவின் கொள்கை வகுப்பு ஆலோசகர்களில் ஒருவரான சுரேஸ் பிரபு தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா கட்சியின் உறுப்பினரான இவர் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர்.
அண்மையில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது செவ்வியில் மேலும் கூறியிருப்பதாவது,
உலக இராணுவ சக்தியாக சீனா எழுச்சி பெறுவது குறித்தும், சீனக் கடற்படை இந்தியப் பெருங்கடலில் விரிவாக்கப்படுவது குறித்தும் நீங்கள் கவலை கொள்ளவில்லையா?
முன்னெப்போதுமில்லாத சீனாவின் எழுச்சியை நாம் வரவேற்கிறோம்.
36 ஆண்டுகளுக்குள், அதன் பொருளாதாரத்தை 60 மடங்கு பெருக்கியுள்ளது சீனா. இது உலக வரலாற்றில் இதற்கு முன் நிகழ்ந்திராத ஒன்று.
உலகின் இரண்டாவது பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது. அது விரைவில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டதாக மாறலாம்.
எந்தவொரு அபிவிருத்தியடைந்து வரும் நாட்டுக்கும் இது ஒரு முன்மாதிரி.
ஆனால், இராணுவத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காக சீனா தனது பொருளாதார வலிமையைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.
தனது அயல் நாடுகளுடன், குறிப்பாக, ஜப்பான், இந்தியா அல்லது அதன் தென்கிழக்காசிய அயல்நாடுகளைப் பயமுறுத்தும் வகையில் எதையும் செய்யக் கூடாது.
இது சீனாவினுடை முக்கியமான பொறுப்பு.
அமைதியான எழுச்சியும், சகவாழ்வும், பிரதான கொள்கைகளாக இருக்க வேண்டும் என்று சீனத் தலைமைப்பீடத்துக்கு, சீனாவின் முன்னாள் தலைவர் டெங் சியாவோ பிங் கூறியிருந்தார்.
புதிய தலைமை இந்த ஆலோசனையை தமது கொள்கைக்கான வழிகாட்டு முறையாக கைக்கொள்ளும் என்றும், ஏனைய நாடுகளில், இராணுவப் பதற்றத்தை ஏற்படுத்தாது என்றும் நான் நினைக்கிறேன்.
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு சீனா விரைவில், தீர்வு காண வேண்டும். நாம் அதுபற்றிக் கரிசனை கொண்டுள்ளோம்.
1962ம் ஆண்டு போர் நடந்த காலத்தில் இருந்து, இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது.
அது இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான, அருணாசலப் பிரதேசத்துக்கு இன்னமும் உரிமை கோருகிறது.
இந்தியாவும், சீனாவும் இணைந்து பணியாற்ற முடியுமென்று, இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் தனிப்பட்ட ரீதியாக கருதுகிறேன்.
ஜப்பானும், சீனாவும் கூட இணைந்து செயற்பட வேண்டும்.
சீனா எழுச்சி பெறவேண்டும். ஆனால், அந்த எழுச்சிய அயல்நாடுகளுடனான பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது.
சீனாவின் கனவு அதன் அயல்நாடுகளை அச்சுறுத்தும் கனவாக இருக்கக் கூடாது.
பொருளாதார பங்காளராக, சிறிலங்காவில் சீனாவின் தலையீடு குறித்து இந்தியா கவலை கொள்கிறதா?
அதுபற்றி எமக்குப் பிரச்சினையில்லை. சிறிலங்கா முன்னேற்றமடைய வேண்டும் என்ற எதிர்பார்க்கிறோம்.
அதற்கு, சீனா, இந்தியா, அல்லது வேறெங்காயினும் இருந்து உதவி பெற முடியும்.
ஆனால், சிறிலங்காவில் சீனா தனது பொருளாதார முதலீடுகளை, பிராந்தியத்தில் புவிசார் அரசியல் பதற்றத்தை உருவாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் நாம் கரிசனையாக இருக்கிறோம்.
தமிழ்நாடு போன்ற, இந்திய மாநிலங்கள், நரேந்திர மோடி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் மேலாதிக்கம் செலுத்த முடியுமா?
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை முடிவு செய்வது புதுடெல்லியே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வெளிவிவகார அமைச்சிலுள்ள சில அதிகாரிகள், வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பதாக, நீங்கள் கூற முடியாது.
இது மக்களின் மனோநிலையின் பிரதிபலிப்பு. எந்தவொரு நாட்டினதும் வெளிவிவகாரக் கொள்கையானது, உள்நாட்டுக் கரிசனைகளின் நீட்சியாகும்.
எனவே, மக்களின் உள்நாட்டுக் கரிசனைகளுக்குப் பதிலளிப்பதென்றால், வெளிப்படையான வெளிவிவகாரக் கொள்கை தொழில்சார் முறையில் கையாளப்பட வேண்டும்.
சிறிலங்கா மீதான அனைத்துலக போர்க்குற்ற விசாரணை பற்றிய இந்தியாவின் கொள்கை என்ன?
இது ஆண்டுதோறும் ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படுகிறது.
இந்திய அரசாங்கம், தீர்மானம் ஒன்றை எடுத்து, கடந்த முறை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
பிராந்தியத்தை முறையாக முன்னேற்றுவதற்கும், மனித உரிமைகள் கவலைகளைத் தீர்ப்பதற்கும், இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அது இந்தியர்கள் மற்றும் இலங்கையர்களின் மனத்தில் எந்தவொரு பிரச்சினையையும், எழுப்பக் கூடாது.
இந்தியத் தயாரிப்பான, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி?
சிறிலங்கா ஒரே நாடு, சிறிலங்காவின் அரசியலமைப்பு வரையறைக்குள் அதிகாரங்களைப் பகிர்வது எப்போதுமே நல்லது.
இந்திய அரசியலமைப்பின், 73வது. 74வது திருத்தங்கள், மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை வழங்குகின்றன.
பிராந்தியங்கள் தம்மைத்தாமே ஆளும் அபிலாசைகளை நிறைவேற்றுவது. எந்தவொரு அரசாங்கத்துக்கும் எப்போதும் நல்லது.