ஆபிரிக்காவையும் தாண்டி இலங்கையிலும் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் - சிறில் ரமபோசா
ஆபிரிக்காவைத் தாண்டி இலங்கையிலும் தென்னாப்பிரிக்காவினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று தென்னாப்பிரிக்காவின் துணை ஜனாதிபதியும், இலங்கை தேசிய பிரச்சினைத் தீர்வுக்கான தூதுவருமான சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு தாம் மேற்கொண்ட விஜயம் வெற்றியளித்துள்ளது.
உண்மையை கண்டறிந்து நல்லிணக்கம் செய்யும் ஆணைக்குழு தொடர்பில் தென்னாப்பிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் தம்மை அழைத்திருந்தது.
இந்த விஜயத்தின் போது அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்கட்சிகளுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விடயத்தில் சர்வதேச அழுத்தம் அவசியம்: நவிப்பிள்ளை வலியுறுத்து
இலங்கை விடயத்தில் சர்வதேச கவனமும் அழுத்தமும் அவசியம் தேவை என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பதவியிலிருந்து விலகிச் செல்லவுள்ள நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளதாக அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாத இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லவுள்ள நவநீதம்பிள்ளை ‘அல்ஜசீரா” தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் இலங்கை தொடர்பிலான கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளிக்கையில் :-
“இலங்கை தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்த சில விடயங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் விதந்துரைக்கப்பட்ட விடயங்களை ஒத்துள்ளன.
அவற்றையே எனது அறிக்கையிலும் நான் வலியுறுத்தி இருக்கிறேன். எனது இந்த அறிக்கை இலங்கைக்கு எதிரான பிரசாரம் அல்ல.
இலங்கை யுத்த அழிவுகளில் இருந்து மீள்கட்டுமானம் அடைந்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என விரும்புகின்றது. இது அவசியம்தான்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்குவது அதனை விட முக்கியமானது. இதையே நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசை பல முறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கேட்டுக்கொண்டது. ஆனால் அதனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது.
கடந்த ஆண்டு நான் இலங்கைக்கு சென்றிருந்த போது என்னை சந்தித்த மக்களில் சிலரும்- மதத்தலைவர்களும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதுவே எனது பணிக்காலத்தில் நான் சந்தித்த மிக மோசமான சம்பவம்.
இந்நிலையில் இலங்கையின் இத்தகைய செயற்பாடுகளுக்கும்- பிரச்சினைத் தீர்வுக்கும் சர்வதேச கவனமும்- அழுத்தமும் தேவை என்ற உறுதிப்பாட்டை எனக்கு அச்சம்பவம் ஏற்படுத்துகின்றது” என்றும் கூறியுள்ளார்.