முறைகேடாக வந்தவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு- கடத்தல்காரர்களுக்கு மாற்றுவழியாக தென்னிந்தியா அமைந்து விடக்கூடாது
31 Jul,2014
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக ஆஸ்திரேலிய குடியேற்ற மந்திரி ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக எங்கள் நாட்டிற்கு முறைகேடாக வந்த 37 குழந்தைகள் உள்ளிட்ட பலர் தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குழு புதுச்சேரியில் இருந்து வந்தவர்கள்.
இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வருகிறார்கள். இந்தியாவின் துன்புறுத்தல் இருப்பதாக இங்கு வந்தவர்கள் கூறுகிறார்கள். இது முட்டாள்தனமானது என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
மனித கடத்தல்காரர்களுக்கு மாற்றுவழியாக தென்னிந்தியா அமைந்து விடக்கூடாது: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவுக்கு மனித கடத்தல்களை மேற்கொள்வோருக்கு தென்னிந்தியா மாற்றுவழியாக அமைந்து விடக்கூடாது என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் சக்லிங் இதனை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய மனித கடத்தல் சட்டங்களை கடுமையாக்கிய பின்னர் இலங்கையில் இருந்து குறைந்தளவான படகுகளை அவுஸ்திரேலியாவுக்கு சட்டரீதியற்ற வகையில் சென்றுள்ளன.
இந்தநிலையிலேயே மாற்றீடாக தென்னிந்தியாவை கடத்தல்காரர்கள் பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 157 அகதிகளில் நீண்டகாலமாக இந்தியாவில் தங்கியிருந்த அகதிகளை மீண்டும் பொறுப்பேற்க இந்தியா இணங்கியுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.