போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய மேற்கு நாடுகள், உள்நாட்டு விசாரணைக்கு, ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
போரின்போது, தமது நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தொடர்பான தகவல்களை வழங்கும்படி, பல மேற்குலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஏனென்றால், காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இந்த தகவல்கள் முக்கியமானவை.
ஆனால், அவர்களிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
வடக்கு, கிழக்கில் முன்னர் காணாமற்போனதாக அல்லது கடத்தப்பட்டதாக அல்லது கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பலர், பின்னர் பிற இடங்களில் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு 2009இல் சிறிலங்காப் படையினரால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்ட, தயாபரராஜா என்பவர், கடந்த மே மாதம் தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது நாடுகளில் குடியேறிய தமிழர்களின் விபரங்களை கனடா, இந்தியா, சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, நோர்வே, அவுஸ்ரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது
கிளாஸ்கோவில் இருந்து மகிந்தவைத் துரத்திய போர்க்குற்றச்சாட்டுகள் – தி ரைம்ஸ்
சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அடுத்தவாரம் கிளாஸ்கோவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சபங்கேற்கமாட்டார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் “தி ரைம்ஸ்” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த 26 ஆண்டு காலப் போரின் இறுதிக்கட்டத்தில், 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள பிரார்த்தனையில் தாம் பங்கேற்றால், இதன் தாக்கம், எதிரொலிக்கும் என்ற கவலை சிறிலங்கா அதிபருக்கு ஏற்பட்டுள்ளது.
கொமன்வெல்த் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய அரசியல்வாதிகள் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்கின்றனர்.
அடுத்த ஆண்டு வரை கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக மகிந்த ராஜபக்ச பதவி வகிப்பார் என்ற போதும், அவர் இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கி நிற்கவுள்ளார்.
புனித முன்கோஸ் தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில், சிறிலங்கா சார்பில், பிரித்தானியாவுக்கான அதன் தூதுவர் பங்கேற்கவுள்ளார்.
இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்குமாறு, சிறிலங்கா அதிபருக்கு, பிரித்தானிய அரசாங்கம் கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.