தமிழகத்தில் இருந்து தப்பிச் சென்ற 157 இலங்கை அகதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய சுங்கத் துறைக்குச் சொந்தமான கப்பலில், தமிழகத்தில் இருந்து கடந்த மாதம் தப்பிச் சென்ற இலங்கை அகதிகள் 157 பேர் அவுஸ்திரேலியா அருகே நடுக்கடலில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
விபத்தில் முடிந்த பயணம்:
தமிழகக் கடல் பகுதியில் இருந்து 157 பேருடன் இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டபடி சென்ற கப்பலின் என்ஜின், அவுஸ்திரேலியாவின் கிறிஸமஸ் தீவு அருகே கடந்த ஜூன் 29ஆம் தேதி பழுதாகி தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, அவுஸ்திரேலியக் கடற்படை அனைவரையும் மீட்டு விசாரணை நடத்தியது.
அவர்கள் ஏற்கனவே இலங்கையில் இருந்து தப்பித்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்த அகதிகள் என்றும், போலீஸ் கெடுபிடி, கட்டுப்பாடுகள் காரணமாக இங்கிருந்து வெளியேறி அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, அனைவரையும் அவுஸ்திரேலியக் கடற்படை கைது செய்து சர்வதேச கடல் பகுதியில் அந்த நாட்டு சுங்கத் துறையின் கப்பலிலேயே கடந்த ஜூன் 29ம் தேதி முதல் காவலில் வைத்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு:
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டீபன் டொனாக் அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையின் போது, மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே உணவு உட்கொள்வதற்காக கப்பலில் உள்ள அறைக்கு வெளியே அனுமதிக்கப்படுவதாகவும் அகதிகள் கூறியுள்ளனர் என்று ஸ்டீபன் டொனாக் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
குழப்பத்தில் அவுஸ்திரேலியா:
அவுஸ்திரேலிய அரசின் அட்டர்னி ஜெனரல் முன்வைத்த வாதம்:
இலங்கையில் இருந்து நேரடியாக வராமல் இந்தியாவில் தஞ்சம் அடைந்து, பின்னர் அங்கிருந்தும் தப்பித்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வர அனைவரும் முற்பட்டனர்.
அவர்களை சட்டவிரோதமாகக் குடியேற முயன்றவர்களாகக் கருதி திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதே வழக்கத்தில் உள்ள சட்ட நடைமுறை.
ஆனால், சர்வதேசக் கடல் பகுதியில் அவர்கள் வந்த படகு பழுதடைந்து விட்டது. அவர்களைத் திரும்ப அனுப்புவதென்றால் எந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பது? அவர்களை யார் அழைத்துச் செல்வது? இந்த விவகாரத்தை எப்படிக் கையாளுவது?' எனக் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், இது சர்வதேச கடல்சார் சட்டம் தொடர்புடைய விவகாரம் என்பதால் ஏழு நீதிபதிகள் அடங்கிய முழுமையான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும், அதுவரை பிடிபட்டவர்களை அவர்களின் தாயகத்துக்கு (இலங்கை) அனுப்பக் கூடாது' என்று குறிப்பிட்டு அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அவுஸ்திரேலியா கோரிக்கை:
இதற்கிடையே, அவுஸ்திரேலிய குடியுரிமைத் துறை அமைச்சர் ஸ்காட் மொரிஸன் கடந்த திங்கட்கிழமை டில்லி வந்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்தார்.
சிறைபிடிக்கப்பட்டவர்கள் கடைசியாக இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதால், அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள். மூவருக்கு மட்டுமே கொஞ்சம் ஆங்கிலம் தெரிகிறது. எனவே, இந்தியா உதவ வேண்டும் என்று கோரினார்.
இதுகுறித்து டில்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலர் சையது அக்பருதீனிடம் கேட்டதற்கு,
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களைத் திரும்பப் பெற சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய அமைச்சரிடம் இந்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்களை அடையாளம் காணவும் அவுஸ்திரேலியாவின் கான்பராவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் முயற்சி எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்:
தமிழகக் கடலோரப் பகுதி வழியாகவே அவர்கள் சிறிய, சிறிய படகுகள் மூலம் சென்று நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகில் ஏறி, பின்னர் இந்திய கடல் எல்லையைத் தாண்டிச் சென்றதை மத்திய உளவுத் துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகும் அகதிகள் முகாம்களிலும், தமிழகக் கடலோரக் காவல் கண்காணிப்பிலும் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. மேலும், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது.
சவால் விடுக்கும் பிரச்சினை:
இவற்றுக்கிடையே, "சர்வதேச கடல் எல்லையில் வேறு நாட்டில் தஞ்சம் அடைந்த வெளிநாட்டு அகதிகள் பிடிபட்டால் அவர்களை எவ்வாறு நடத்துவது?' என்பதைத் தெளிவுபடுத்தாமல் உள்ள சர்வதேச கடல்சார் சட்டத்துக்கு சவால் விடுக்கும் சர்வதேச பிரச்னையாக இந்த விவகாரம் உருவெடுத்துள்ளது.
தவிப்பில் உள்ள 157 அகதிகளுக்காக இந்தியாவிலும், இலங்கையிலும் இதுவரை யாரும் குரல் கொடுக்க முன்வரவில்லை. இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் தாமாக முன்வந்து அக்கறை காட்டினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
தப்பியது எப்படி?
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 38 குழந்தைகள் உள்பட இலங்கைத் தமிழ் அகதிகள் 157 பேர் கடந்த ஜூன் 11-ம் தேதி கடல் வழியாகத் தப்பிச் சென்றனர்.
அவுஸ்திரேலியக் கடற்படையினரிடம் கடந்த ஜூன் 29ம் தேதி பிடிபட்டனர். அவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட படகு புதுச்சேரியைச் சேர்ந்த உரிமையாளர் மஞ்சனிக்கு சொந்தமானது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
படகு உரிமையாளர் கைது:
இது குறித்து புதுச்சேரி காவல்துறை டிஐஜி கே. ஜெகதீசன் கூறியதாவது:
சந்தேகத்தின்பேரில் படகு உரிமையாளர் மஞ்சனி, ராஜு, சஞ்சீவ் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தோம். படகை மீன்பிடி சுற்றுலாவுக்காக விஜயன் என்ற இலங்கை அகதி வாடகைக்கு ஜூன் 11ம் தேதி கேட்டுப் பெற்றதாக மஞ்சனி கூறுகிறார். இருப்பினும், பிரச்சினை மிகவும் தீவிரமானது என்பதால் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தமிழகக் காவல்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது என்றார் அவர்.
பிந்திக்கிடைத்த செய்தி
157 புகலிடக்கோரிக்கையாளர்களும் கொக்கோஸ் தீவு முகாமிற்கு மாற்றம்
கடந்த சில நாட்களாக 157 புகலிடக் கோரிக்கையாளர்களை வைத்திருந்த சுங்கத் திணைக்களத்தின் கப்பல் தற்போது கொக்கோஸ் தீவை நோக்கி செல்வதாக அவுஸ்திரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன
அங்கு இருக்கும் குடிவரவு திணைக்களம் இவர்களை அவுஸ்திரேலியா எல்லைக்கு உட்பட்ட தடுப்பு முகாமிற்குள் பாரம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
இதவரை கப்பல் இருந்த இடமும் அதில் உள்ள அகதிகளின் நிலைமைகளும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது
இவர்களுக்காக தொடர்ந்த வழக்குகளின் வெற்றியே இன்று முகாமிற்குள் செல்வதற்கான முக்கிய காரணமாகும்.
இந்த கப்பலானது நாளை சனிக்கிழமை கரையை அடையலாம் என நம்பப்படுகின்றது.