.
.
சீனக்குடாவில், சீன நிறுவனம் சார்பில் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக, சீன விமானப்படைத் தளபதி ஜெனரல் மா சியாவோதியனுடன், சிறிலங்கா
விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக கடந்த வாரத்துக்கு முந்திய வாரம், சீனாவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயணம் குறித்த தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாக வைத்திருந்தது.
இதன்போது, கடந்த 10ம் நாள் மாலை 6.30 மணியளவில், சிறிலங்கா விமானப்படைத் தளபதி, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் விமானப்படைத் தளபதி ஜெனரல் மா சியாவோதியனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களின் போதே, இருநாட்டு விமானப்படைகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், சீனக்குடாவில், சீனாவின் வான்பொறியியல் ஏற்றுமதி இறக்குமதிக் கூட்டுத்தாபனம், அமைக்கவுள்ள விமானப் பராமரிப்பு நிலையம் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதுதொடர்பாக, சிறிலங்கா விமானப்படைத் தளபதி, சீனாவின் வான்பொறியியல் ஏற்றுமதி இறக்குமதிக் கூட்டுத்தாபனத்துக்கும் சென்று பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.
இது சீனாவின் பாதுகாப்பு உற்பத்திகள் மற்றும் விமான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்ட 34 விமானங்களை சிறிலங்கா விமானப்படை கொண்டுள்ளது.
இவற்றை இந்த நிறுவனமே பராமரித்து வருகிறது.
இந்த நிறுவனமே தனது விமானப் பராமரிப்புத் தளம் ஒன்றை சீனக்குடாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா விமானப்படைத் தளபதி பேச்சு நடத்திய விவகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் மூடி மறைத்திருந்தது.
கடந்த வாரம், இந்திய விமானப்படைத் தளபதி, சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையிலேயே, இந்த தகவலை சிறிலங்கா அரசாங்கம் வெளியே விட்டுள்ளது.
ஜெனரல் மா சியாவோதியன், கடந்த 2011ம் ஆண்டு டிசெம்பர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது