இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்க எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை நடாத்தி நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோதபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் இவ்வாறான ஓர் முனைப்பு எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களுடன் அமெரிக்கப் பிரஜையான கோதபாய ராஜபக்ஷ எவ்வாறு தொடர்புபட்டிருக்கின்றார் என்பது குறித்து அமெரிக்க பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பிலான நியூயோர்க் சட்டக் கல்லூரியின் பேராசிரியர் ரெயன் குடிமென் விரைவில் அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் குற்றச் செயல்களில் ஈடுபட்டரா என விசாரணை நடத்தி, அமெரிக்க சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கை இன நல்லிணக்கத்திற்கான அமெரிக்க காங்கிரஸ் துணைச் சபைக்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென குறித்த காங்கிரஸ் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குடிமான் ஏற்கனவே ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இராணுவ உதவிகள், தொழில்நுட்ப பரிமாற்றம், சர்வதேச நிதி நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் உதவிகள் ஆகியனவற்றை வரையறுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை ரத்து செய்ததனை அமெரிக்கா பின்பற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வாழ் தமிழர்களுடன் அமெரிக்காவிற்கு நீண்ட கால தொடர்பு காணப்படுவதாகவும் இதனால் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென குடிமென் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி இனி இயங்காது
வடக்கு மாகாண அபிவிருத்திகளுக்கான ஜனாதிபதி செயலணி இனிமேல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக நல்லிணக்க பணியகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சுக்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கைகளில், ஜனாதிபதி செயலணி இனி நடைமுறையில் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமக்கு ஜனாதிபதி செயலணியின் செயலாளர் டி.திவாரட்ண அறிவித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தெரிவித்துள்ளார்.
எனினும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இன்னும் 23 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இவர்கள் நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
பலர், இராணுவ ஆக்கிரமிப்பினால் தமது இடங்களில் குடியேற முடியாமல் உள்ளனர்.
ஜனாதிபதி செயலணியானது, மீள்குடியேற்றம் மற்றும் அந்த குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே அமைக்கப்பட்டது.
இதில் 19 பேர் அங்கம் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கைப், வீடியோ கொன்வரன்ஸ் மூலமாக ஐநா விசாரணை குழுவிடம் சாட்சியமளிக்கலாம்!
இலங்கையில் வாழும் தமிழர்கள் தொலைபேசி, 'வீடியோ கொன்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. அந்த தகவல்களின்படி, இலங்கையின் போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பணியகம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்க வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் இலங்கையின் மனித உரிமைகள் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியமளிப்பதில் சிக்கல்கள் உள்ளன.
குறிப்பாக நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக் நகரங்களுக்கு சென்று சாட்சியமளிப்பதில் சிக்கல்கள் உள்ளன.
காரணம் ஐ.நா. குழுவிடம் சாட்சியமளிப்பவர்கள் துன்புறுத்தல், அச்சுறுத்தலுக்கு ஆளாகக் கூடிய நிலைமை இலங்கையில் உள்ளது. சாட்சியமளிப்போரைப் பாதுகாக்கும் விதத்திலான சட்ட அமைப்புகள் இலங்கையில் இல்லை.
எனவே இலங்கையில் வாழும் சாட்சியாளர்கள் தொலைபேசி, 'வீடியோ கெண்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக்கில் அமையும் ஐ.நா. விசாரணைக் குழுவின் முகவர் இடங்களுக்கு தங்கள் சாட்சியங்களை அளிக்க முடியும் - என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எந்த ஒரு சர்வதேச விசாரணையையும் இலங்கையில் நடத்த அந்நாட்டு அரசாங்கம் விரும்பவில்லை என்பதுடன் அனுமதிக்கவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.