அமெரிக்காவுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகரும், வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன ஒரு வார காலப் பயணமாக வொசிங்டன் சென்றுள்ளார்.
அமெரிக்காவுடன் பரந்துபட்ட உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும், வர்த்தகத்தை விரிவாக்கிக் கொள்ளும் நோக்கிலேயே தாம் வொசிங்டன் வந்திருப்பதாக, அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சிறிலங்காவுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும், அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு, மூன்று அனைத்துலக நிபுணர்களை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்த பின்னணியிலேயே, சஜின் வாஸ் குணவர்த்தன அமெரிக்கா சென்றுள்ளார்.
அத்துடன், போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
இந்தநிலையில், காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு, போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆணை பிறப்பித்துள்ளார்.
இத்தகைய சூழலிலேயே, அமெரிக்காவுடனான உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதற்காக, வொசிங்டன் சென்றுள்ள சஜின் வாஸ் குணவர்த்தன, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா விவகாரத்தில் மோடி அரசுடன் இணைந்து செயற்படும் அமெரிக்கா- அமெரிக்க உயரதிகாரி தகவல்
சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட முடியும் என்று அமெரிக்க முன்னேற்றத்துக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் அனைத்துலக கொள்கை நிலையத்தின் உதவித் தலைவரான விக்ரம் ஜே சிங் தெரிவித்துள்ளார்.
முன்னர், தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவிப் பாதுகாப்புச் செயலராகப் பணியாற்றிய இவர், நரேந்திர மோடி அரசாங்கத்துடனான அமெரிக்காவின் உறவு குறித்து பிரிஐயிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பிராந்திய விவகாரங்களில் நரேந்திர மோடியுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட முடியும்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் உறுதிப்பாட்டு விவகாரங்களில் மட்டுமன்றி, சிறிலங்கா, நேபாளம், பங்களாதேஸ், மாலைதீவு ஆகிய நாடுகளின் விவகாரங்களிலும், இந்தியாவுடன் இணைந்து செயற்பட முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் சிவில் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி - அமெரிக்கா கவலை
சிறிலங்காவில் சிவில் சமூகத்தின், பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமையை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுதொடர்பாக, ருவிட்டரில் கவலையை பதிவு செய்துள்ளது.
அதில், சிறிலங்காவில் சிவில் சமூகம், அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் எல்லா மக்களினதும், பேச்சு சுதந்திரத்தையும், ஒன்றுகூடும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த, எடுக்கப்படும் முயற்சிகள் குறித்த அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.