கிளிநொச்சி விவசாய, பொறியியல் பீடங்களுக்கு 600 மில்லியன் ரூபா உதவி வழங்குகிறது இந்தியா
14 Jul,2014
யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நன்கொடை உதவியை வழங்க முன்வந்துள்ளது.
கிளிநொச்சியில் அமைக்கப்படும், இந்த இரண்டு பீடங்களுக்குமான நிதி உதவியை வழங்கும் புரிந்துணர்வு உடன்பாடு நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.
இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவும், உயர்கல்வி அமைச்சின் செயலர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரத்னவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்த திட்டத்தின் கீழ், இரு பீடங்களுக்குமான உட்கட்டமைப்பு வசதிகளை இந்தியா செய்து கொடுக்கவுள்ளது.
விவசாய பீடத்துக்கு, விரிவுரை மண்டபங்கள், ஒரு மாநாட்டு மண்டபம், கணினி ஆய்வகம், நூலகம், மற்றும் விளையாட்டுத் தளத் தொகுதி என்பனவும், பொறியியல் பீடத்துக்கு, விரிவுரை மண்டபங்கள், ஒரு மாநாட்டு மண்டபம், ஆய்வகங்கள், நிர்வாக பணியகம், பணியாளர் அறை என்பனவற்றையும் இந்தியா அமைத்துக் கொடுக்கவுள்ளது.
இதற்காக 600 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரத்ன ஆகியோர் இணைத் தலைமை தாங்கும், குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.