சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், புதுடிடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இன்று மதியம் 1 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பின்போது, மீனவர்களின் விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக என்டிரிவி செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்காவுக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பையும் மீள வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் சாதகமாக நடந்து கொண்ட இந்தியாவுக்கு சுஸ்மாவிடம் நன்றி கூறினார் பீரிஸ்
ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு சாதகமாக இந்தியா எடுத்த நிலைப்பாட்டுக்கு, இந்திய வெளிவ்விகார அமைச்சரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று புதுடெல்லியில் நடந்த சந்திப்பின் போதே அவர், இதனைத் தெரிவித்துள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும் அவருடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நடத்திய பேச்சுக்களால், இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளது.
அந்தச் சந்திப்பின்போது சிறிலங்காவுக்கு வரும்படி இந்தியப் பிரதமர் மோடிக்கு, சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மோடி விரைவில் கொழும்பு வருவதற்கு ஒழுங்கு செய்யுமாறு சுஸ்மா சுவராஜை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும், சிறிலங்காவுக்கு வருமாறு சுஸ்மா சுவராஜுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
சிறிலங்காவில் இந்திய உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து திருப்தி தெரிவித்த பீரிஸ், வடக்கு மாகாணத்திலும் சிறிலங்காவின் பிற பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் தொடருந்து, நெடுஞ்சாலை, துறைமுகம் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் இலங்கைத் தமிழர்களின் மீள்குடியேற்றத் திட்டங்களுக்கும் இந்தியா தொடர்ந்து நிதியுதவியும், மனித ஆற்றல் ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு சாதகமாக இந்தியா எடுத்த நிலைப்பாட்டுக்கு பீரிஸ் நன்றி தெரிவித்தார்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் வகையில், ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் 10வது பந்திக்கு எதிராக இந்தியா வாக்களித்ததற்கும், சிறிலங்கா அரசாங்கத்தின் நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு செயல்முறைகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சரிடம், பீரிஸ் எடுத்துக் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 184 பேரை விடுதலை செய்ய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபடக்ச உத்தரவிட்ட நடவடிக்கை, இந்தியா மீது சிறிலங்கா கொண்டுள்ள மரியாதையின் வெளிப்பாடு என பீரீஸ் குறிப்பிட்டார்.
மீன் வள ஆதாரத்தை நம்பி இரு நாட்டு மீனவர்களும் உள்ள நிலையில், அவர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களிடையே நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அந்த முயற்சியில் இந்திய, சிறிலங்கா அரசுகள் முழுமையான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என உடன்பாடு எட்டப்பட்டது.
இந்தியா - சிறிலங்கா இடையிலான வர்த்தக உறவை விருத்தி செய்வது தொடர்பாக இரு நாட்டு வர்த்தகத் துறைச் செயலர்கள் கூட்டம் கடந்த ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்றது.
அதன் பயனாக இரு தரப்பிலும் வணிக, வர்த்தக முதலீடுகள் அதிகரித்துள்ளதற்கு இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவில் இந்தியாவின் ஆதரவு சிறிலங்காவுக்குத் தொடர்ந்து தேவை என்பதை பேச்சுக்களின் போது பீரிஸ் வலியுறுத்தினார்.
இருதரப்பு உறவுகளுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியமான பங்கை வகிக்கிறது. அது வெளிப்படையாகவும் திறந்த நிலையிலும் தொடர்வது வரவேற்கத்தக்கது.
கடலோரக் கண்காணிப்பில் சிறிலங்கா ஈடுபட வசதியாக இரு கண்காணிப்புப் படகுகளை வழங்குவதுடன், சிறிலங்கா முப்படையினருக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சியை தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் பீரிஸ் கேட்டுக் கொண்டார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது ஊவா மாகாணசபை
ஊவா மாகாணசபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணசபையைக் கலைக்கும், உத்தரவை வர்த்தமானியில் வெளியிடும் உத்தரவை, நேற்றிரவு மாகாண ஆளுனர் நந்தா மத்யூ சிறிலங்கா அரசாங்க அச்சகருக்கு பிறப்பித்துள்ளார்.
ஊவா மாகாணசபையைக் கலைப்பதற்கான பரிந்துரைக் கடிதம், நேற்றுக்காலை 8.30 மணியளவில் மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவினால் வழங்கப்பட்டதையடுத்து, அரசாங்க அச்சகருக்கு அது தொடர்பான கடிதத்தை அனுப்பிவிட்டதாக, நந்தா மத்யூ தெரிவித்துள்ளார்.
இனிமேல், தேர்தலுக்கான ஒழுங்குகளை அறிவிக்க வேண்டியது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தமக்கு இதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கைபேசி குறுந்தகவல் செய்தி மூலமே தாம் இதனை தெரிந்த கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.