முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேசசபையின் செயலாளரான சுந்தரலிங்கம் ரவீந்திரநாதனுக்கு, வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் (CLG) ஜெகூவால் உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெகூவால் 03.07.2014 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள இடமாற்ற கட்டளை (Transfer Order) கடிதத்தில், யாழ்ப்பாணம் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு பணி இடமாற்றலாகி செல்லுமாறு ரவீந்திரநாதன் கோரப்பட்டுள்ளார்.
ரவீந்திரநாதனின் இடமாற்றத்தை இரத்து செய்து, கரைதுறைபற்று பிரதேசசபையில் தொடர்ந்தும் மக்கள் சேவையாற்ற அவரை அனுமதிக்குமாறு வலியுறுத்தி, கரைதுறைபற்று பிரதேசசபை ஊழியர்கள் 38 பேரும், கரைதுறைபற்று பிரதேச பொது அமைப்புகளும் கையொப்பமிட்டு வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், அமைச்சர் றிசாட் பதியூதீன் ஆகியோருக்கு மகஜர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
முறையற்ற இடமாற்றமும், அரசியல் பழிவாங்கலும்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பிரதேசசபைகளுக்கு உள்ளுராட்சிசபை தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும், அமைச்சர் றிசாட் தனது அரசியல் சுயலாப நோக்கங்களுக்காக புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைபற்று பிரதேசசபைகளுக்கான தேர்தல்களை நடத்த விடாமல் தடுத்து வைத்திருப்பது யாவருக்கும் தெரிந்ததே.
மக்களால் முன்மொழியப்பட்ட சபையை அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையினால், இவ்விரு பிரதேசசபைகளிலும் தவிசாளர்களுக்கு பதிலாக அனைத்து கடமை மற்றும் பொறுப்புகளையும் செயலாளர்களே கவனித்து வருகின்றனர்.
யுத்தத்துக்கு பின்னர் கரைதுறைபற்று பிரதேசசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பபட்டுக்கொண்டிருந்த சூழலில், ரவீந்திரநாதன் செயலாளராக கடமையேற்ற பின்னர் ஒதுக்கப்பட்ட நிதி,
புதிய பொதுச்சந்தைகள் கட்டப்பட்டமை, பழைய சந்தைகள் புனரமைக்கப்பட்டமை, தார் வீதிகள் இடப்பட்டமை, கிரவல் வீதிகள் செப்பனிடப்பட்டமை, வீதிகளுக்கு ஒளியூட்டப்பட்டமை, பிரதேசசபையின் உப அலுவலகங்கள், நூலகங்கள், சிறுவர் பூங்காக்கள் திறக்கப்பட்டமை என்று முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், ஊழியர்களின் நிரந்தர நியமனம் மற்றும் வேதன அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க பாடுபட்டதாகவும், ஊழியர்களும் பொதுமக்களும் ரவீந்திரநாதனின் பணியில் திருப்தியும் மகிழ்ச்சியும் காணுகின்றனர்.
இந்நிலையில் வடமாகாண ஆளுநரின் கூட்டணியான வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் (CLG) ஜெகூ, முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் (ACLG) பிரபாகரன் ஆகியோருடன், இலங்கை தமிழரசு கட்சியின் உபசெயலாளரும் வடமாகாணசபையின் பிரதித்தவிசாளருமாகிய அன்ரனி ஜெகநாதனும் இணைந்து, ரவீந்திரநாதனுக்கு இடமாற்றம் கொடுப்பதற்கு அதிக சிரத்தையுடன் வேலை செய்துள்ளனர்.
ரவீந்திரநாதன் மீது நிதி மோசடி, ஊழல்கள் என்று பொய் குற்றச்சாட்டுகளை பாரப்படுத்தி, மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் (ACLG) அலுவலகத்தின் ஆய்வு உத்தியோகத்தர் (IO) மூலம் குற்றப்பட்டியல் தயாரித்து வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு (PPSC) சமர்ப்பித்துள்ளனர்.
சட்ட ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரமும் வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கே உள்ள நிலையில், ரவீந்திரநாதன் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர் மீது பாரப்படுத்தப்பட்ட எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.
இடமாற்றம் வழங்குதல் அன்றி, அரச சேவையிலிருந்து நீக்குதல் எதுவாயினும் நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரமும் வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கே (PPSC) உள்ள நிலையிலும், அதிலும் PPSC இன் விசாரணையில் ரவீந்திரநாதன் மீது எவ்வித குற்றமும் நிரூபணமாகாத நிலையில், சட்டத்துக்கு முரணான வகையில் தனது அதிகார வரம்பை மீறி ரவீந்திரநாதனுக்கு இடமாற்ற கட்டளையை ஜெகூ வழங்கியுள்ளார்.
ஜெகநாதனின் வியாபார (பிசினஸ்) முரண்பாடுகள்!
சிலாவத்தைக்கும் அளம்பிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஜெகநாதனுக்கு 100 ஏக்கர் தென்னங்காணிகள் உண்டு. மாகாணசபை உறுப்பினர் என்பதற்கும் அப்பால், அவருக்கு தனிப்பட்ட வருமான தொழில்கள் உண்டு.
ஒன்று:
யாராவது மீள முடியாத கடன் சுமை, வியாபார நஸ்டத்தில் வீழ்ந்து, அவசர பணத்தேவைக்காக தமது அசையா சொத்துகளான வீடு, வளவு, வயல், வாசல், துறவு, காணி, நிலம் என்று எதையாவது விற்க முனைந்தால், “மரத்தால் ஏறி விழுந்தவனை எருது ஏறி மிதித்த கதை”யாக அரா விலைக்கு அவர்களிடம் அந்த சொத்துகளை வாங்குதல்.
இரண்டு:
ஏழை எளியவர்களின் வயிற்றில் அடித்து ஏய்த்துப்புழைக்கும் வகையில், குறைந்த ரேட்டில் தோட்டக்காணிகளை வளைத்துப்போடுதல்.
மூன்று:
பிரதேசசபைகள் சந்தை கடைத்தொகுதிகளை கேள்வி கோரல்களுக்கு விடும் போது, தனது பண பலத்தை பயன்படுத்தி அவற்றை வாங்கிய பின்னர், அவற்றை வர்த்தகர்களுக்கு கூடிய முற்பணத்தை பெற்றுக்கொண்டு, அதிக வாடகைக்கு கொடுப்பது.
நடந்தது என்ன?
கேள்வி கோரல்கள் மூலம் தன்னால் எடுக்கப்பட்ட கடைத்தொகுதிகளை யாரும் வாங்க வராவிட்டால், அவற்றை அப்படியே பூட்டி வைத்திருப்பது ஜெகநாதனின் பழக்கமாகும். இப்போதும் கூட முல்லை நகர (பழைய) சந்தை கட்டடத்தொகுதியில் இவரால் எடுக்கப்பட்ட கடைகள் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன.
ஒன்று:
இதனால், பிரதேசசபைக்கு கிடைக்க கூடிய வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதேசசபையின் செயலாளரான ரவீந்திரநாதன் இது தொடர்பில் ஜெகநாதனிடம் கேள்வி எழுப்பியதோடு, கடைகளை திறந்து வியாபாரம் நடைபெற வழிவகை செய்யவும், இல்லை கேள்வி கோரல்களிலிருந்து விலகிவிடுமாறும் அழுத்தம் கொடுத்ததோடு, உயர் அதிகாரிகளுக்கும் ஜெகநாதனின் செயல்பாடு தொடர்பில் முறைப்பாட்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
இரண்டு:
இந்த நிலையில், முல்லை நகரப்பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அதிநவீன மேல்மாடி சந்தை கட்டடத்தொகுதியிலும் தனது “மகன் செழியனுக்கு கடைகளை தர வேண்டும்” என ஜெகநாதன் கோரியிருக்கிறார். அதற்கு செயலாளர் ரவீந்திரநாதன், “முன்னர் கேள்வி கோரல்களில் எடுத்த கடைகளை வியாபாரத்துக்கு வழிவகை செய்யாமல் பூட்டி வைத்திருப்பதால் புதிதாக கடைகளை தர முடியாது” என்று மறுத்திருக்கிறார்.
மூன்று:
ஜெகநாதனின் உறவினர் ஒருவரின் ஐஸ் உற்பத்தி கடை முல்லை நகரப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், அங்கு யாராவது புதிதாக ஐஸ் உற்பத்தி கடைகளை திறந்தால் தனது உறவினரின் தொழில் வருமானத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால், நகரப்பகுதியில் “ஐஸ் உற்பத்தி கடைகளை அமைக்க புதிய அனுமதிகளை வழங்க வேண்டாம்” என பிரதேசசபையிடம் ஜெகநாதன் கேட்டுள்ளார். அப்படியிருந்தும், புதிய ஐஸ் உற்பத்தி கடைகளை அமைக்க தொழில் உரிம விண்ணப்பம் கோரியவர்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே இத்தகைய முரண்பாடுகளை மனதில் வைத்துக்கொண்டு, கரைதுறைபற்று பிரதேசசபையின் செயலாளர் பதவியிலிருந்து ரவீந்திரநாதனை தூக்கி எறிவதை ஒரு சபதமாக ஜெகநாதன் எடுத்துக்கொண்டார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக,
இன்னுமொரு பெரும் காரணமும் விருப்பமும் உண்டு.
தனது எழுந்தாமான விருப்பங்களை நடைமுறைப்படுத்த, சட்டத்துக்கு முரணான காரியங்களை சாதிக்க, தனது தாளத்துக்கு ஆட்டம் போடக்கூடிய தனது விசுவாசி விக்ரர் என்பவரை கரைதுறைபற்று பிரதேசசபையின் செயலாளராக்க வேண்டும் என்பது ஜெகநாதனின் நீண்ட நாள் கனவாகும்.
அதிகார வர்க்கத்தின் கால் கையைப்பிடித்து, முல்லைத்தீவு கச்சேரியில் சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தராக (CDO) பணியாற்றி வரும் விக்ரரை எப்படியாவது கரைதுறைபற்று பிரதேசசபையின் செயலாளராக்கி விடுவதற்காக, வடமாகாணசபை உறுப்பினர் ஆவதற்கு முன்பிருந்தே கடும் முயற்சிகளை ஜெகநாதன் எடுத்திருந்தார்.
யார் இந்த விக்ரர் ஜெயசிங்கம்?
வடமாகாணசபை தேர்தலின் போது வாக்கு எண்ணும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தவர்களில் இவரும் ஒருவராவார். அத்தேர்தலில் வீட்டு சின்னத்துக்கு மட்டுமே விழுந்திருந்த வாக்குகளை ஜெகநாதனின் வாக்குப்பெட்டிக்கு (எண்ணிக்கைக்கு) மாற்றி, புளொட் சார்பில் போட்டியிட்ட பவான் என்பவரை தோல்வியுறச்செய்த சூத்திரதாரியே இந்த விக்ரர் ஜெயசிங்கம் ஆவார்.
வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-
தமிழ் தேசியக்கூட்டமைப்பு” தேர்தல் கால கூட்டணி மட்டுமே!
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் அணி) தமது கட்சியின் வருடாந்த மாநாட்டுக்காக தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.
அக்கட்சியின் 34வது வருட மாநாட்டை இம்மாதம் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாள்கள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
19ம் திகதி யாழ்.நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியிலும், மறுநாள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திலும் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாதம் ஈ.பி.ஆர்.எல்.எப், அடுத்த மாதம் இலங்கை தமிழரசு கட்சி, அதற்கடுத்த மாதம் ரெலோ, அதற்கு பின்னர் புளொட் என்று, தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் தத்தமது கட்சியின் மாநாட்டுக்காக தயாராகி வருகின்றன.
ஒரு கட்சி மூன்று இலட்சம் ரூபாய்கள் செலவழித்து முந்நூறு பேரை திரட்டி மாநாடு நடத்தி விட்டால், இன்னுமொரு கட்சி அதற்கு போட்டியாக ஐந்து இலட்சம் ரூபாய்கள் செலவழித்து ஐந்நூறு பேரை திரட்டி மாநாடு நடத்தி காட்டுவதாக வந்தவன் போனவன் நின்றவனிடம் எல்லாம் சவால் விடுவதாக உறுதியாக அறிய கிடைக்கின்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யப்பட்ட பலமிக்க ஒரு அரசியல் கட்சியாக்கி அதனை மக்கள் மயப்படுத்தும் உறுதிப்பாட்டை, உளத்தூய்மையை, சிந்தனையை, கடாசி குப்பைத்தொட்டிக்குள் வீசி விட்டு, தாம் சார்ந்த கட்சிகளை மட்டும் பலப்படுத்தி, தத்தமது கட்சிகளின் கொள்கையையும் இருப்பையும், பாதுகாப்பதை மட்டும் நோக்கமாகக்கொண்டு, கட்சிக்கு ஆள்பிடிக்கும் வேலைகளில் இவர்கள் அனைவரும் மிகத்தீவிரமாக இறங்கி விட்டனர்.
தேர்தல் வந்தால் மட்டுமே, தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனும் பெயரை தூசு தட்டி துடைத்துக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட தற்போது வடக்கில் இடம் பெறும் அரச படைகளின் காணி சுவீகரிப்புகளும், இவர்களின் வாக்கு சுவீகரிப்புகளும் ஒன்று தான் என்பதை, இவர்கள் தமது செயல்பாடுகளின் மூலம் நித்தமும் நிரூபித்து கொண்டிருக்கின்றனர்.
“கூட்டமைப்பை பதிவு செய்யாமல் இனிவரும் தேர்தல்களில் வாக்குகள் கேட்டு எங்களிடம் வரவே வேண்டாம்” என்று, மக்கள் ஒரேயடியாக அதுவும் உச்சந்தலை அடியாக மறுத்துக்கூறி, ஏதாவது ஒரு தேர்தலில் இவர்களுக்கு மோசமான படிப்பினையை கொடுத்தால் மாத்திரமே, “கூட்டமைப்பை பதிவு செய்தல்” எனும் இழுபறி விவகாரத்துக்கு முடிவு காண முடியும்.
இப்படி செய்வதற்கு கூட, மக்களை வழி நடத்த மிகச்சிறந்த மாற்றுத்தலைமைகள் வேண்டுமே! யாருலர்?
சிறப்புச்செய்தியாளர்,
-கவரிமான்-