வங்காளதேசம்: கியாஸ் ஆலையில் தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
06 Mar,2023
வங்காளதேசத்தில் கியாஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். டாக்கா, அண்டை நாடான வங்காளதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிதகுண்டாவில் கியாஸ் ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் மளமளவென பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதமும் இதே பகுதியில் உள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.