பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
16 Feb,2023
அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் பீதியில் உறைந்தனர். மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கி.மீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்
6.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து பின் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. துருக்கியில் கடந்த வாரம் ஏற்பட்ட 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 41,000 பேர் பலியாகினர். அதே போல் நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.