டெல்லியின் புறநகர் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) சமீர் சர்மா இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கூடுதல் துணை ஆணையர் பிபிசி நிருபர் தில்நவாஸ் பாஷாவிடம் தெரிவித்தார்.
டெல்லியின் துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் செளத்ரி, "இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், 14 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது," என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "டெல்லியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்," என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது இரங்கல் செய்தியில், "டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டர் பக்கத்தில், டெல்லியின் முண்ட்காவில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அரசு நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை அங்கு சென்றடைகிறது. காயம் அடைந்த மக்களை மீட்டு உடனடி சிகிச்சையை வழங்க முன்னுரிமை தரப்படுகிறது என்று கூறியுள்ளார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "இந்த துயர சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். தீயை கட்டுப்படுத்தவும், மக்களின் உயிரைக் காப்பாற்றவும் எங்களின் துணிச்சலான தீயணைப்பு வீரர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்து வருகின்றனர். அனைவருக்கும் கடவுள் அருள் புரிவாராக" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - விஞ்ஞானிகள் தரும் விளக்கம்
இந்தியாவில் மின்வெட்டு பிரச்னை: நிலக்கரி தட்டுப்பாடுக்கு காரணம் என்ன?
இந்த தீ விபத்து குறித்து முண்ட்கா காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். முண்ட்கா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள மூன்று மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.