இஸ்ரேலுக்கு லெபனானில் இருந்தும் ராக்கெட் வீச்சு -இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதலில் பலி 2200 ஆக உயர்வு
25 Aug,2014

காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகளை ஒடுக்குவதற்காக கடந்த 50 நாட்களாக சண்டையிட்டு வரும் இஸ்ரேல் நாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் விதமாக லெபனான் நாட்டில் இயங்கிவரும் போராளிக் குழுக்களும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.
இஸ்ரேல்- லெபனான் எல்லைப்பகுதியில் உள்ள கிர்யட் ஷ்மோனா மற்றும் மெடுலா நகரங்களின் மீது லெபனான் போராளிகள் 2 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்த இஸ்ரேல், லெபனான் எல்லையோரமுள்ள பகுதிகளில் போர் விமானங்களின் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றது.
இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 2200 ஆக உயர்வு
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மீண்டும் ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அரசு, கெய்ரோவில் கடந்த வாரம் நடைபெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டு காஸா மீது மீண்டும் குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.
இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் 49வது நாளை எட்டியுள்ள நிலையில் இஸ்ரேல் மீது நேற்று ஹமாஸ் படையினர் 38 முறை ராக்கெட்களை வீசி தாக்கியதாகவும், இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸா பகுதியில் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியானதாகவும் அங்குள்ள போர் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 49 நாட்களாக காஸா பகுதி மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை மட்டும் 2100-ஐ கடந்துள்ளது.
இவர்களில் 70 சதவீதம் பேர் அப்பாவி பொதுமக்கள் என்றும் சுமார் 500 குழந்தைகள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும், பத்தாயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் தரப்பிலும் 64 ராணுவ வீரர்கள் உள்பட 68 பேர் பலியாகியுள்ள நிலையில் கடந்த 48 நாட்களாக நீடித்துவரும் சண்டையில் இரு தரப்பிலும் பலியானோரின் எண்ணிக்கை 2200-ஐ எட்டியுள்ளது.