
ஈராக்கில், சிறுபான்மையினரான சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பைத் தொடங்கி, அரசுப்படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். அவர்கள் பல நகரங்களை கைப்பற்றி, பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனர்.
தலைநகர் பாக்தாத்துக்கு அருகே தியாலா மாகாணத்தில் உள்ள சன்னி பழங்குடியின முஸ்லிம்களை, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுடன் சேருமாறு வற்புறுத்தி வந்தனர். ஆனால், அவர்கள் மறுத்து விட்டனர். அதனால், அவர்கள் மீது தீவிரவாதிகள் ஆத்திரம் அடைந்தனர்.
மசூதியில் தாக்குதல்
இந்நிலையில், தியாலா மாகாணத்தின இமாம் வைஸ் கிராமத்தில் உள்ள சன்னி மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மசூதிக்குள் நுழைந்தான்.
அவன் திடீரென அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். அந்த களேபரத்தை பயன்படுத்திக் கொண்டு, மற்ற தீவிரவாதிகள் மசூதிக்குள் நுழைந்தனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த சன்னி முஸ்லிம்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
68 பேர் பலி
தகவல் அறிந்து பாதுகாப்பு படையினரும், ஷியா பிரிவு போராளிகளும் அங்கு வந்தனர். ஆனால், தீவிரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்ததால் அவர்களில் 4 பேர் பலியானார்கள். 13 பேர் காயம் அடைந்தனர். மொத்தத்தில், இந்த தாக்குதலில் 68 பேர் பலியானார்கள். 50–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதல் காரணமாக, பல சமூகத்தினரும் அங்கம் வகிக்கும் அரசு அமைக்கும் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் உளவாளிகளாக செயல்பட்ட 18 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை
இஸ்ரேல் உளவாளிகளாக செயல்பட்ட 18 பாலஸ்தீனர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
காஸா முனையில் இருந்து கொண்டு, இஸ்ரேலுடன் சதி செய்து, உளவாளிகளாக செயல்பட்டு வந்ததாக 7 பாலஸ்தீனர்கள் மீது ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மத்திய காஸா சதுக்கத்தில், மசூதி ஒன்றில் முஸ்லிம்கள் தொழுகை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, அவர்கள் முன்னிலையில், அந்த உளவாளிகளை தலைகளை துணியால் மூடி மறைத்து, கைகளை கட்டி, தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதேபோன்று, காஸா பகுதியில் ஒரு போலீஸ் நிலையத்தில் வைத்து 11 பாலஸ்தீனர்களை அவர்கள் இஸ்ரேல் உளவாளிகளாக செயல்பட்டு வந்ததாகக் கருதி, ஹமாஸ் இயக்கத்தினர் சுட்டுக்கொலை செய்தனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. ஒரே நாளில் 18 உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, காஸாமுனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஸா நகரில் ஹமாஸ் தீவிரவாத இயக்க தலைவர்கள் வீடுகளின் மீது இஸ்ரேல் ராக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து உளவாளிகளாக செயல்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 2,087 பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹமாஸ் இயக்கத்தினரும், இஸ்ரேல் ராணுவமும் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.