
நைஜீரியாவில் போகோ ஹராம் போராளிகள் மேலும் ஒரு நகரை கைப்பற்றினர்
நைஜீரியாவில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி போகோ ஹராம் இஸ்லாமிய போராளிகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் சண்டையில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது போகோ ஹராம் போராளிகள் நைஜீரியாவின் வடக்கு யோபே மாநிலத்தில் உள்ள புனி யாடி என்ற நகரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் அங்குள்ள அரசு கட்டிடத்தை கைப்பற்றும்போது ராணுவ வீரர்கள் யாரும் அங்கு இல்லை என்று நேரில் பார்த்தவர்களும், அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இதுகுறித்து யோபே கவர்னரின் செய்தி தொடர்பாளர் அப்துல்லாகி பேகோ கூறும்போது, “புனி யாடியில் ராணுவ வீரர்கள் யாரும் இல்லை. போகோ ஹராம் போராளிகள் சுதந்திரமாக வந்து சென்.றனர் என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்’’ என்றார்.
இஸ்ரேல் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகள்
இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் போராளிகளுக்கு இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இத்தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர எகிப்தில் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று, இடையில் போர் நிறுத்தமும் ஏற்பட்டது.
பின்னர் ஹமாஸ் போராளிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதில் ஹமாஸ் ராணுவத் தளபதி மொஹம்மட் டெய்ஃப் என்பவரின் மனைவியும் மகளும் பலியானார்கள். அவர்களுடன் மேலும் சில பொதுமக்களும் இறந்தனர்.
இந்நிலையில் இன்று இஸ்ரேலில் உள்ள பென் குரியோன் விமான நிலையம் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்ற தகவல் தெரியவில்லை. இத்தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, சர்வதேச விமானங்கள் இந்த விமான நிலையத்திற்கு விமானங்களை இயக்க வேண்டாம் என்று ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் செய்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2069 பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்னர்
காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் இன்று ஒரு வீட்டின் மீது விமானம் மூலம் குண்டு வீசியது. இதில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 3 சீனியர் கமாண்டர்கள் உள்பட 19 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இறந்த 3 சீனியர் கமாண்டர்களும் மொகமது அபு ஷமாலா, மொகமது பர்ஹோம் மற்றும் ரயாத் அல்-அத்தார் எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் கடத்தல், சுரங்கம் அமைத்தல் மற்றும் 2006-ம் ஆண்டு இஸ்ரேல் ராணுவ வீரரை சிறைபிடித்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள்.
ஹமாஸின் தெற்குப் பகுதியில் உள்ள ரபாக் அருகே நடந்த தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக காஸா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பலியான பர்ஹோம், ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் பாவ்சி பர்ஹோமின் நெருங்கிய உறவினர் ஆவார்.
நேற்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதியின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை அமெரிக்கா அதிரடி
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கம் ஹக்கானி தீவிரவாத இயக்கம் ஆகும். இது தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கம் ஆகும். இதன் முன்னணி தலைவர்கள் 5 பேரின் தலைக்கு அமெரிக்கா 30 மில்லியன் டாலர் (சுமார் ரூ.183 கோடி) விலை அறிவித்துள்ளது.
இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன் வேறு பல தாக்குதல்களையும் அரங்கேற்றியவர்கள் ஆவார்கள்.
இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிவிக்கையில், ஹக்கானி இயக்கத்தின் முன்னணி தலைவர்களான அஜிஸ் ஹக்கானி, கலில் அல் ரகுமான் ஹக்கானி, யாஹ்யா ஹக்கானி, அப்துல் ராவுப் ஹக்கானி ஆகிய 4 பேரின் தலைகளுக்கு தலை 5 மில்லியன் டாலர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் தலைவனான சிராஜூதீன் ஹக்கானியின் தலைக்கு அறிவித்த 5 மில்லியன் டாலர் விலையை 10 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவர்களை உயிருடன் பிடிப்பதற்கு அவர்களது இருப்பிடம் பற்றிய தகவல்களை தந்து, அவர்களை பிடிக்க உதவுகிறவர்களுக்கு அமெரிக்கா இந்த பரிசினை வழங்கும்
* தாய்லாந்து நாட்டில் ராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா கடந்த மே மாதம் 22–ந் தேதி ரத்தம் சிந்தாமல் புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த நிலையில் அந்த நாட்டு பாராளுமன்றம் அவரை பிரதமராக நேற்று அறிவித்துள்ளது. இதற்கு அந்த நாட்டின் அரசர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
* அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது, உலகையே உலுக்கி உள்ளது. போலேயை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகள், அவரை உயிருடன் விடுவிக்க அமெரிக்காவிடம் ஒரு பெருந்தொகையை பணயத்தொகையாக கேட்டதாகவும், அதை அமெரிக்கா ஏற்க மறுத்து விட்டதாகவும், போலே குடும்பப் பிரதிநிதியும், அவரோடு தீவிரவாதிகளிடம் பிடிபட்டிருந்த பணயக்கைதி ஒருவரும் தெரிவித்தனர். இதற்கிடையே போலேயையும், பிற அமெரிக்க பணயக்கைதிகளையும் மீட்க அமெரிக்கா கடந்த கோடை காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாகவும் இப்போது தெரிய வந்துள்ளது.
* உள்நாட்டுப்போர் நடந்து வரும் உக்ரைனில் அந்த நாட்டின் பொருளாதார துறை மந்திரி பாவியோ ஷெரமேட்டா (வயது 43) நேற்று பதவி விலகினார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை எப்படி மீட்டெடுப்பது என்பதில் அரசுடன் ஏற்பட்ட மோதலால்தான் தான் பதவி விலகி இருப்பதாக சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
* ஜேம்ஸ் போலேயை போன்று தாங்கள் பிடித்து வைத்துள்ள மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளரையும் கொல்லப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் அதற்கு அஞ்சாமல், ஈராக்கில் மொசூல் நகர் அருகே நேற்று அமெரிக்க படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். ஆளில்லா விமானங்களும் குண்டுவீச்சு நடத்தி உள்ளன.
* பிரேசில் அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட களம் இறங்கிய வேட்பாளர் எட்வர்டோ காம்பஸ், விமான விபத்தில் பலியானதைத் தொடர்ந்து புதிய வேட்பாளராக மரினா சில்வா என்ற பெண் சுற்றுச்சூழல் பிரசாரகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
* ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அமெரிக்காவின் 4 மெக்டொனால்டு உணவகங்கள் இயங்கி வந்தன. ஆனால் சுகாதார விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, இந்த உணவகங்களை தற்காலிகமாக மூடி ரஷிய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததின் எதிரொலியாக இது பார்க்கப்படுகிறது.