
கடத்தி சென்ற யாஸிதி இளம்பெண்களை மதம் மாற்றி திருமணம்: ஐ.எஸ். போராளிகள் ஏற்பாடு
பாக்தாத்துக்கு அடுத்தபடியாக ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ். எனப்படும் ஜிஹாதி போராளிகள் அப்பகுதியினை இஸ்லாமிய ஆட்சி முறைக்குட்பட்ட தனிநாடாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஈராக்கின் பல்வேறு பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, குர்திஷ் படைகளுடன் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வந்த ஜிஹாதி படையினர், சிரியா-ஈராக் எல்லைப் பகுதியில் மோசூலை ஒட்டியுள்ள சிஞ்சார் நகரையும் கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர்.
சிஞ்சார் நகரில் ஸொராஸ்ட்டிரிய கோட்பாடுகளை பின்பற்றி வாழும் யாஸிதி இனத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களை கடத்திச் சென்ற ஐ.எஸ்.படையினர், இளம்வயதுடைய அழகிய பெண்களை தனியாக பிரித்து, அவர்களை மத மாற்றம் செய்து, திருமணம் செய்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஈராக்கில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலவச நிலம், வீடு, வசதியான வாழ்க்கை என்ற வாக்குறுதிகளின் மூலம், வயது முதிர்ந்த பெண்களையும் மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யவும் அவர்கள் முயன்று வருவதாகவும் ஒரு செய்தி குறிப்பிட்டுள்ளது
ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுக்கும் ஐ.நா தீர்மானம்: சவுதி, குவைத் ஒப்புதல்
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா. பாதுகாப்பு சபை நடத்திய கூட்டம் ஒன்றில், ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்து இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தையும் சிரியாவில் செயல்பட்டுவரும் அல்கொய்தா நுஸ்ரா முன்னணியையும் வலுவிழக்கச் செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு திட்டமாக அவர்களுக்கு செய்யப்படும் நிதியுதவி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பணக்கார வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள பெரும் செல்வந்தர்களே சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்துப் போரிட்டுவரும் ஷன்னி இஸ்லாமியப் போராளிகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாக மேற்கத்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஷன்னி இஸ்லாமியர்களுக்கு சவுதி செல்வந்தர்கள் உதவுவதுபோல் ஈரானின் நட்பு நாடான குவைத்தில் உள்ள ஷியா பிரிவு, மிதவாத ஷியா தரப்பினருக்கு உதவுவதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஐஎஸ்ஐஎஸ், நுஸ்ரா முன்னணி என்ற இரு பிரிவுகளையும் தடை செய்யப்பட்டதாக அறிவித்துள்ள சவுதி அரசு இந்த இரு பிரிவுகளுக்கும் தனியார் நன்கொடை அளிப்பதை எதிர்த்துப் பிரசாரம் செய்யுமாறு தங்கள் நாட்டின் மதகுருமார்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
குவைத்தும் ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்று அதன் அடிப்படையில் செயல்படும் என்று ஐ.நா.விற்கான குவைத் தூதர் மன்சூர் அயத் அல் ஒடைபி கடந்த சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை நீண்ட காலமாகத் தடை செய்யப்பட்ட பிரிவில் வைத்திருக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை நுஸ்ரா முன்னணியையும் இந்த ஆண்டு துவக்கத்தில் அந்த லிஸ்டில் இணைத்துள்ளது.
இவர்களுக்கு உதவி செய்பவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பேரில் இருவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இருவர் குவைத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. குவைத்தைச் சேர்ந்த ஷேக் ஹஜ்பின் பஹத் அல் அஜ்மி என்ற பிரபல மதகுருவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.