
140 மணி நேரத்துக்குப் பிறகு சீனச் சுரங்கத்தில் சிக்கிய 13 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு
தென்கிழக்கு சீனாவின் குயிழோ மாகாணத்தில் உள்ள ஷிகியான் பகுதியில் நெடுஞ்சாலை சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
வழக்கம்போல், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பணிகள் நடைபெற்று வந்த போது, திடீரென்று அந்த சுரங்கம் இடிந்து விழுந்ததால் அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த 13 பணியாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டனர்.
இடிந்த சுரங்கத்தின் பக்கவாட்டில் சுமார் அரை கிலோ மீட்டர் நீளமுள்ள மாற்றுச் சுரங்கம் தோண்டப்பட்டு, அதன் வழியாக உள்ளே சிக்கிக் கொண்டவர்களுக்கு குழாய் மூலம் பிராண வாயு மற்றும் உணவு, குடிநீர் ஆகியவற்றை அளித்த அதிகாரிகள் அவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 140 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்கள் அனைவருமே நல்ல உடல்நிலையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, டாக்டர்கள் ஆலோசனையின்படி, இவர்களுக்கு உணவாக முட்டை, கஞ்சி, பால், வாழைப்பழம் உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்
சீனாவில், நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததில், 56 பேர் சிக்கிக் கொண்டதில், 40 பேர் மீட்கப்பட்டனர்; 16 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் உள்ளது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால், சுரங்கத்திற்குள் வெள்ள நீர் புகுந்து விட்டது. அதன் உள்ளே நிலக்கரி வெட்டிக் கொண்டிருந்த, 56 பேர், தண்ணீரில் சிக்கிக் கொண்டனர். கடும் சிரமத்திற்கு பிறகு அவர்களில், 40 பேர் மீட்கப்பட்டனர். இன்னும், 16 பேர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர்.
சுரங்கத்தின் உள்ளே தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. ராட்சத மோட்டார்கள் மூலம், தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஒரு சுரங்கம் வெட்டி, அதன் வழியாக, உள்ளே சிக்கிக் கொண்டவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
காசாவில் தொடர்கிறது இருதரப்பு சண்டை நிறுத்தம்
இஸ்ரேல் - 'ஹமாஸ்' பயங்கரவாதிகள் இடையே பின்பற்றப்படும், ஐந்து நாள் சண்டை நிறுத்தம் நேற்று, இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இருதரப்பிலும் எவ்வித தாக்குதலும் நடைபெறவில்லை. ஆனால், காசா பகுதியில், பாலஸ்தீனியர்களின் ராக்கெட் தாக்குதலை தடுத்து நிறுத்தவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்க வலியுறுத்தியும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர், டெல் அவிவ் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பிலும் சண்டை துவங்கிய பின், இஸ்ரேலில் நடத்தப்பட்ட முதல் ஆர்ப்பாட்டம் இது தான்.
இதற்கிடையே, இரு தரப்பிற்கும் இடையே நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்படுத்த, எகிப்து நாட்டின் முயற்சி யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.