பாகிஸ்தானில் ராணுவ விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகள் கொலை= இம்ரான் கான் துப்பாக்கி சூடு தாக்குதல்
15 Aug,2014

பாகிஸ்தானில் ராணுவ விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சமுங்கிலி மற்றும் காலித் ஆகிய இரண்டு விமானப்படை தளங்கள் மீது நேற்று இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சமுங்கிலி விமானப்படை தளத்திற்குள் தீவிரவாதிகள் அதிபயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். தீவிரவாதிகள் தானியங்கி ஆயுதங்கள், கையெறிகுண்டுகள், ராக்கெட் குண்டைகளை கொண்டு வந்துள்ளனர். அவர்கள் தற்கொலை தாக்குதல் உடையும் அணிந்திருந்தனர். அப்போது தீவிரவாதிகளை அடையாளம் கண்டு கொண்ட பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுதரப்பினரும் துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட்டனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் குண்டை வெடிக்க செய்தான். ராக்கெட் குண்டுகளையும் தீவிரவாதிகள் வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினரும் காயம் அடைந்தனர்.
காலித் ராணுவ விமானப்படைத் தளத்திற்குள் நுழந்த 5 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ராணுவ தளத்தை தகர்க்க அவர்கள் வைத்திருந்த குண்டுகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி செயல் இழக்க செய்தனர். சமுங்கிலி விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாதுகாப்பு படையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலீபான் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இது போன்ற தாக்குதல்களை தலீபான் இயக்கம் பாகிஸ்தானில் நடத்தியுள்ளது. ஜூன் மாதம் கராச்சியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 10 பேரும் கொல்லப்பட்டனர்.
நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக போராட்டம்: இம்ரான் கான் வாகனம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல்
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக போராட்டம் நடத்தும் இம்ரான் கான் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், அந்த நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5–ந் தேதி பதவி ஏற்றார். ஆனால் பொதுத்தேர்தலில் பெருமளவு ஊழலை அரங்கேற்றி நவாஸ் ஷெரீப் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதாக, தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் ஆகிய இரு கட்சிகளும் கரம் கோர்த்துக்கொண்டு, நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. மேலும், சுதந்திர தினத்தன்று (நேற்று) லாகூரில் இருந்து அணிவகுத்து, தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு சென்று, நவாஸ் ஷெரீப் அரசு பதவி விலகும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இம்ரான்கானும், தாஹிர் உல் காதிரியும் அறிவித்தனர். அதன்படி அங்கு இரு கட்சியினரும் அணி வகுத்து செல்கின்றனர்.
இம்ரான் கான் தலைமையில் தொண்டர்கள் அணிவகுத்து சென்றபோது குஜ்ரன்வாலாவில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வாகனம் மீது மற்றொரு பிரிவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே என்னை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டம் காரணமாக நவாஸ் ஷெரீப் அரசு தலைநகர் இஸ்லாமாபாத்தை கோட்டை அரண் போல மாற்றி விட்டது. அந்த நகருக்கு செல்கிற எல்லா நுழைவாயில்களும் அடைத்து ‘சீல்’ வைக்கப்பட்டு விட்டன. தலைநகருக்குள் அரசு எதிர்ப்பு போராட்டக்குழுவினர் நுழைந்தால் அவர்களை தடுத்து நிறுத்துகிற வகையில், 25 ஆயிரம் போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 245–ன் கீழ், அரசுக்கு உதவுகிற வகையில் அங்கு ராணுவமும் அழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தாலும், ஆட்சியைக் கவிழ்க்க ராணுவம் தயாராக இல்லாத நிலையில் நவாஸ் ஷெரீப் அரசு பிழைத்து விடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.