இன்று 68-வது சுதந்திர தினம்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ9 ஆயிரத்தில் இருந்து ரூ10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றி உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.நாட்டின் 68 வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சுதந்திர தின உரை:நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது. பகத்சிங் போன்ற தியாக வீரர்களால் சுதந்திரம் கிடைத்ததை எண்ணிப்பார்க்க வேண்டிய நாள் இன்று!.பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் என நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு தலைவர்கள்- பல்வேறு வழிகளில் போராடி உள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன்.இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதுதான் எனது இலட்சியம்.சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் உயிரை மாய்த்துக்கொண்ட அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துகிறேன்.சுதந்திரத்தைப் பெறுவது எளிது அதை பாதுகாப்பது கடினம், சுதந்திரத்தின் பயனை அனைவரும் பெரும் வகையில் அடையச் செய்வது அதைவிடக் கடினம். அதிமுக அரசு சுதந்திரத்தின் பயனை ஏழை எளியவர்கள் அனைவரும் பெரும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது.ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். ஆனால் ஏழையின் சொல்தான் புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும். ஏழை எளியவர்களை பாதுகாக்கும் அரசாக அவர்களை கைதூக்கிவிடும் அரசாக எனது அரசு செயல்பட்டு வருகிறது.சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஓய்வூதியம், கறவைப் பசு, வெள்ளாடுகள், தாலிக்குத் தங்கம், ரூ.50000 நிதி உதவி, கேபிள் டிவி, அம்மா உணவகங்கள், குடிநீர், உப்புத்திட்டம் என சமுதாயத்தில் அடித்தட்டு மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.விலையில்லா திட்டங்கள் மட்டுமல்லாது கல்விக்கு உயரிய முக்கியத்துவம் அளித்து ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.ஒருவனுக்கு மீனைப் பிடித்துக் கொடுப்பதை மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு தொழில் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.சுதந்திரத்தின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையச் செய்கிறது உங்கள் அன்பு சகோதரியின் அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழினத்துக்காக, தமிழ் மொழிக்காக அல்லும்பகலும் பாடுபடுகிற தமிழக அரசு. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ9 ஆயிரத்தில் இருந்து ரூ10ஆயிரமாக உயர்த்தப்படும்சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ4,500ல் இருந்து ரூ 5 ஆயிரமாக உயர்வு, விடுதலைப் போராட்ட வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ2 ஆயிரத்தில் இருந்து ரூ4 ஆயிரமாக உயர்த்தப்படும்.அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பலவகை கலவை சாதம், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணா நாமத்தின் படி நாட்டின் சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடும் இந்த திருநாளில் அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் வாழ்க
எழைகள் வங்கிக் கணக்கு தொடங்க ஜன்தான் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - பிரதமர் மோடி
எழைகள் வங்கிக் கணக்கு தொடங்க ஜன்தான் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி காலை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, மின் ஆளுமை பணியை திறனுடனும், சிறப்பாகவும் செய்ய உதவுகிறது. அனைவரும் இணையதள வசதியை பெற்றால்தான் நவீன இந்தியாவை உருவாக்க முடியும். நவீன இந்தியா உருவாக எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி அதிகளவில் தேவை. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்பொருட்கள் உற்பத்தி இருக்க வேண்டும். கால மாற்றம் ஏற்பட்டுள்ளதால் திட்டக்குழுவில் மாற்றம் கொண்டுவரப்படும். இறக்குமதி செய்யும் நாடாக இல்லாமல் ஏற்றுமதி செய்யும் தேசமாக இந்தியா மாற வேண்டும். எழைகள் வங்கிக் கணக்கு தொடங்க ஜன்தான் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஜனதான் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். சார்க் நாடுகளின் வறுமையை ஒழிக்க அண்டைய நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
சுகாதாரமான இந்தியா உருவாக மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து பள்ளிக் கூடங்களிலும் கழிவறை வசதி அமைக்கப் வேண்டும்.
காந்திக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்தியாவை தூய்மைப்படுத்த அக்.2 முதல் பரப்புரை செய்யப்படும். என்று பிரதமர் மோடி பேசினார்.
இன்று 68-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று 68-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் 68-வது விடுதலை நாள் விழாவை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த விடுதலை நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பசி, வறுமை, வன்முறை, ஏழை - பணக்காரன் பாகுபாடு, இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணமான மது ஆகியவை ஒழிக்கப்படும் நாள் தான் நமக்கு உண்மையான விடுதலை நாள் ஆகும். எனவே, மது அரக்கனை ஒழிக்கவும், மக்களின் துயரங்கள் விலகவும், நாடு முழுவதும் அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை தழைத்தோங்கவும் இந்த நன்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நம்நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு இந்திய நாடு வளம் பெற வேண்டும். இந்திய மக்கள் துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் உயிரையும், ரத்தத்தையும் கொடுத்து தங்களின் வீரத்தாலும், விவேகத்தாலும் நமக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தனர். அந்த சுதந்திரத்தை பேணிக்காத்திட நாம் சூளுரை ஏற்போம். இந்த இனிய நன்நாளில் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தலைவர்களின் வழியில் சென்று எதிர் வரும் காலங்களில் நாட்டில் அமைதியும், முன்னேற்றமும், அனைத்து மக்களுக்கும் ஏற்படவும், வறுமை ஒழியவும், இந்த சுதந்திர திருநாள் வழிவகுக்கட்டும் என தே.மு.தி.க. சார்பில் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
பா.ஜ.க. மாநில தலைவரும், மத்திய இணை மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தேசம் எங்கும் வன்முறை ஒழிந்து அமைதி, மகிழ்ச்சி பெருகிடவும், அனைவரிடையேயும் நல்லிணக்கம் மலர்ந்திடவும், வறுமை நீங்கி வளம் சிறந்திடவும், தமிழர் நலன் பெற்றிடவும் மீனவர் பிரச்சினை தீர்ந்திடவும் ஒற்றுமை ஒருமைப்பாட்டுணர்வோடு ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என இந்நாளில் உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் தமிழக பா.ஜ.க. சார்பில் சுதந்திரநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பி.எஸ்.ஞானதேசிகன்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இன்றும் வாழ்க்கையின் கரையோரம் வாழ்ந்து கொண்டிருப்போர், தலைக்கு மேல் கூரை இல்லாமல் மழையிலும், வெயிலிலும் காய்ந்து கொண்டிருப்போர், சாக்கடை ஓரத்திலும், சகதியிலும் தங்களின் தின வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிற அனைவருக்கும் நல்வாழ்வு மலர வேண்டும் என்று இந்த சுதந்திரத் திருநாளில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பல சோதனைகளைச் சமாளித்து பல துறைகளில் முன்னேற்றம் கண்ட பிறகும் கோடான கோடி மக்கள் வறுமையில் வாடுவதும் நீடிக்கிறது. மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்க போரற்ற உலகுக்காக, வறுமை ஒழிந்து வளம் பெருக்கி இம்மண்ணில் பிறந்த அனைவரும் சரிநிகர் சமானமாக வாழத்தக்க இந்தியாவை அமைக்க, சுதந்திர தின உறுதிமொழியாக ஏற்போம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆர்.சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
‘சுதந்திரம் நமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்’ என்ற கோஷத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி நாம் சுதந்திரம் அடைந்து 68-வது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த இனிய சுதந்திர திருநாளில் இந்திய சகோதர - சகோதரிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் அனைவரும் வளமோடும், மகிழ்வோடும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற என் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, அனைவருக்கும் இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துகளை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
என்.ஆர்.தனபாலன்
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து உலகமே வியக்கத்தக்க வகையில் வெற்றி நடைபோட வேண்டும். இந்திய மக்கள் அனைவரும் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வறுமையின்றி வாழ வன்முறை இல்லாத இந்தியா உருவாகிட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்று இந்நன்னாளில் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலேயரின் பேராதிக்கத்தில் இருந்து நாடு விடுதலை பெற்ற பொன்னாள்தான் ஆகஸ்டு 15. இப்பொன்னாளில் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீமைகள் இல்லாத இந்திய தேசத்தை கட்டி எழுப்புவோம் என்று இந்த நாளில் சூளுரை ஏற்போம். அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்போம். அதே நேரத்தில், இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவரும் சம உரிமையோடு சுதந்திரத்தின் பலனை அனுபவிக்கவும் உறுதி ஏற்போம் என்று கூறி அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எச்.வசந்தகுமார்
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் அபுபக்கர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, தங்க தமிழ்நாடு கட்டுமான - அமைப்புசாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்க தலைவர் க.பொன்வேல்சாமி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, கொங்குநாடு ஜனநாயக கட்சி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி, மக்கள் தேசிய கட்சி நிறுவன தலைவர் சேம.நாராயணன், அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் மரூர் என்.தருமலிங்கம். மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் மாநில தலைவர் இளம்பிறை ஏ.எம்.ஜூபைர் அலி, அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ம.மத்தியாஸ் என்ற சீனிவாசன், இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் சு.தாமஸ், சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை தலைவர் மேலை நாசர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணைத்தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணி அரசன், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி ஆகியோரும் சுதந்திர வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.