ஜப்பானில் புயலும் வீசுகின்றது-பூகம்பமும் தாக்கியது: ஒருவர் பலி-50 பேர் காயம்
ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி
10 Aug,2014
ஜப்பான் நாட்டில் இன்று புயல் தாக்கியதில் அங்கு பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியது. இப்புயலுக்கு ஒருவர் பலியானதுடன் 50 பேர் காயமடைந்தனர்.
ஜப்பானில் புத்த வார விழா கொண்டாட்டங்கள் துவங்கிய நிலையில் அங்கு ஹலாங் என்ற புயல், நிலத்தையும், வான் போக்குவரத்தையும் சீர்குலைக்கும் வகையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஒரு புறம் புயல் வீசிய நிலையில், அங்குள்ள வடகிழக்கு கடற்கரை நகரமான அமோரியில் இன்று மதியம் நிலநடுக்கமும் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானது. எனினும் இந்நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புயலினால் மத்திய ஜப்பானில் நாளை 30 செ.மீ மழை பெய்யும் என்றும் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்றும் வீசும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் 1.2 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது
.

ஆப்கனில் நேட்டோ படையினரின் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி
ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று காலை 11:30 மணியளவில் நேட்டோ படையினர் சென்ற வாகனங்கள் மீது நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் நான்கு பொதுமக்கள் பலியானார்கள். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலை நேரடியாக பார்த்த கடைக்காரர் ஒருவர் கூறுகையில், தாக்குதல் நடந்த பகுதியில் முகம் முழுவதும் ரத்தம் படித்த நிலையில் பல மக்கள் விழுந்து கிடந்தனர். வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததால் எங்கள் கடைகளின் ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. தாங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியதாக தாலிபான் இயக்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இத்தாக்குதலில் பல்வேறு வாகனங்களும் சேதமடைந்தன.
அந்நாட்டில் கடந்த 13 வருடமாக போர் நடைபெற்று வந்த நிலையில், அங்கிருந்து நேட்டோ படைகள் படிப்படியாக வெளியேறி வருகின்றன. இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்து நேட்டோ படையினர் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை