தென் கொரியாவில் கடும் புயல்: 200 விமானங்கள் தரையிறக்கம் -நேபாளத்தில் கடும் நிலச்சரிவு: 8 பேர் பலி
02 Aug,2014

தென்கொரியாவின் தெற்கு பிராந்தியங்களில் இன்று கடுமையான புயல் தாக்கியது. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கூரைகள், ஜன்னல் கதவுகள் கடுமையாக சேதமடைந்தன. போக்குவரத்து சிக்னல்கள் உடைந்து விழுந்தன. தெருக்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஜேஜூ தீவில் புயலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து இயக்கப்படும் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தப்பட்டன. அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த வார துவக்கத்தில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

நேபாளத்தில் கடும் நிலச்சரிவு: 8 பேர் பலி
நேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக சிந்துபால்சவுக் மாவட்டத்தின் வழியாக ஓடு சுன்கோஷி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் பல பகுதிகளில் மண் அரிப்பும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சுன்கோஷி ஆற்றங்கரையோரம் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்நிலையில், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் வடகிழக்கே உள்ள பாறைப் பிரதேசமான மன்கா கிராமத்தில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
திடீர் என ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் என்ன நடக்கிறது? என்பதை யூகித்துக் கொள்ளும் முன்னரே மண்ணின் அடியில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புப் படையினர் நண்பகல் நிலவரப்படி 8 பிரேதங்களை மீட்டெடுத்துள்ளனர்.
மண்ணுக்கு அடியில் சிக்கிக் கொண்டுள்ள மேலும் பலரை மீட்கும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.