ஏர் கனடா விமானம் விபத்து: நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு; 72
24 Mar,2026
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இருந்து 72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் புறப்பட்ட ‘ஏர் கனடா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான சி.ஆர்.ஜே-900 ரக விமானம், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.37 மணியளவில் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது ஓடுதளம் 4-ல் சுமார் 24 மைல் வேகத்தில் அந்த விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் விமானத்தை இயக்கிய முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தீயணைப்பு வாகனத்தில் இருந்த ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு காவலர் ஆகிய இருவருக்கு பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் இருந்த பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதுடன் 72 பயணிகளும் உயிர்தப்பினர்.
விபத்தைத் தொடர்ந்து, லாகார்டியா விமான நிலையத்தை அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தற்காலிகமாக மூடியது. அவசரகால மீட்புப் பணிகள் மற்றும் முதற்கட்ட விசாரணையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் அங்கு தரையிறங்க வேண்டிய சுமார் 18-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.