ஈரான் போர்க் கப்பலை மூழ்கடித்தது அமெரிக்க நீர்மூழ்கி: 87 வீரர்கள் உயிரிழப்பு - மீட்பு பணியில் இலங்கை
05 Mar,2026
இந்தியாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு திரும்பியபோது தாக்குதல்
ஈரான் போர்க் கப்பலை மூழ்கடித்தது அமெரிக்க நீர்மூழ்கி: 87 வீரர்கள் உயிரிழப்பு - மீட்பு பணியில் இலங்கை
இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியது. அதில் இருந்த 87 வீரர்கள் உயிரிழந்தனர். அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால் மீட்பு பணியில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஈடுபட்டுள்ளது.
இந்தக் கப்பல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு மறுத்த ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடுத்தன. ஈரான் பதில் தாக்குதலில் இறங்கியதால், அதன் கடற்படையை தகர்க்கும் பணியில் அமெரிக்க கடற்படை இறங்கியது.
ஈரான் கடற்படையில் ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க்கப்பல்கள் இருந்தன. இவற்றில் 16 போர்க் கப்பல்களை அமெரிக்க கடற்படை அழித்தது. ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற போர்க் கப்பல் மட்டும் இந்தியாவின் po;l/ விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்த சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, நேற்று ஈரான் திரும்பிச் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் ‘டேனா’ போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் டார்ப்பிடோ குண்டு மூலம் தாக்கியது. இதையடுத்து ஈரான் போர் கப்பலில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. சர்வதேச கடல் பகுதியில் எந்த கப்பலில் இருந்து அவசர அழைப்பு விடுத்தாலும், அருகில் உள்ள நாடு மீட்புப் பணியில் ஈடுபடுவது சர்வதேச கடமை.
அதன்படி இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் ஈரான் கப்பல் மூழ்கும் இடத்தில் மீட்புப் பணியை மேற்கொண்டன. இந்த கப்பலில் மொத்தம் 180 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். இதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர். 78 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இவர்களில் 32 கடற்படை வீரர்கள் மீட்கப்பட்டு இலங்கையின் கலே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன வீரர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இத்தகவலை இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்தார்.