இந்தியாவில் மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக உயர்வு
06 Feb,2026
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் தஷ்காய் எனும் இடத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று (5) மாலை இடம்பெற்ற வெடிப்பு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவலில் 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, மேலும் சடலங்கள் இடிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய அரசு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோருக்கு 2 இலட்சம் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 இலட்சம் ரூபாய் வழங்கவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.