விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு - 11 பேரும் உயிரிழந்திருக்கலாம்
18 Jan,2026
இந்தோனேசியாவில் 11 பேருடன் பயணித்த ATR 42-500 ரக விமானம் விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தின் பாகங்களின் இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேகமூட்டம் சூழ்ந்த வெளியில் சுலவேசி தீவில் உள்ள மலைப் பகுதியை நெருங்கும்போதே அவ்விமானம் நேற்று (17) விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கும் மீட்புக் குழுவினர், இன்று (18)பெங்கெப் மரோஸ் (Pangkep–Maros) பகுதியில் உள்ள Mount Bulusaraung என்ற மலைப்பாங்கான இடத்தில் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் விமானத்தின் சிதைவுகளை கண்டுள்ளனர்.
இந்த இடிபாடுகளை கண்ட மீட்புக் குழுவினர், விமானத்தில் பயணித்தவர்கள் அநேகமாக உயிரிழந்திருக்கலாம் என ஊகிப்பதோடு, மேலும் விமானத்தின் சிதைவுகளைத் தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தால் இயக்கப்படும் ATR 42-500 விமானம் 8 பணியாளர்களையும் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சினைச் சேர்ந்த 3 அதிகாரிகளையும் ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று விமானம் மக்காசர் நகரை அண்மித்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அது கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தின் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட விமானம் எனவும் கூறப்படுகிறது.