சீரற்ற வானிலையால் இதுவரை 153 பேர் பலி, 191 பேர் மாயம்
29 Nov,2025
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் பெருவெள்ளம், மண்சரிவு மற்றும் பல்வேறு அனர்த்த சம்பவங்களை முன்னிட்டு உயிரிழப்புகளின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 191 பேர் இதுவரை காணாமல்போயுள்ளனர்.
பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புப் படைகள் மற்றும் மீட்புக்குழுக்கள் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான கனமழை, பலத்த காற்று மற்றும் ஆறுகள் நிரம்பி வழிவந்ததன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு பல கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, வீடுகள், வீதிகள், வயல் நிலங்கள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும், வெளியிடப்படும் புதிய எச்சரிக்கைகளுக்கு தொடர்ந்து கவனம் செலுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளது.