அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள் வீழ்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிராந்தியத்தின் கரையோரம் பல நாட்கள் நீடித்த வெப்பமண்டல சூறாவளி ஃபினா, 3 ஆம் வகை சூறாவளியாக வேகமாக வலுவடைந்ததன் பின்னர் பல நாட்கள் நீடித்துள்ளது.
சனிக்கிழமை இரவு, பரபரப்பான டார்வின் நகருக்கும், கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோ மீற்றர் (50 மைல்) தொலைவில் உள்ள திவி தீவுகளுக்கும் இடையில் சூறாவளி வீசியுள்ளது. அங்கு மணிக்கு 110 கிலோ மீற்றர் (70 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளது.
சூறாவளியின் "மிகவும் அழிவுகரமான மையம்" வடக்குப் பிராந்தியத்திிலருந்து நகர்ந்து விட்டது, ஆனால் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை மற்றும் காற்று நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்பாளர் அங்கஸ் ஹைன்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 19,000 வீடுகள் மற்றும் வணிக செயற்பாடுகளுக்கு மின்சாரம் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட பிராந்தி ஆளுநர் லியா ஃபினோச்சியாரோ தெரிவித்துள்ளார்.
சூறாவளியினால் பாரிய மரங்கள் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளன. வைத்தியசாலை ஒன்றின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
மரங்கள் மற்றும் மின்கம்பிகள் வீழ்ந்து கிடப்பதால் பொதுமக்கள் நகர்ந்து செல்லும்போது கவனமாக இருக்குமாறும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ஃபினா சூறாவளி மேற்கு அவுஸ்திரேலியாவை நோக்கி நகர்ந்து வருகிறது, மேலும் இது 4-வது வகை சூறாவளியாக வலுவடையக்கூடும் என கணிப்புகள் கூறுகின்றன.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை சூறாவளி கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனவும், வரும் நாட்களில் அது படிப்படியாக நகர்ந்து விடும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அபாயத்தை அதிகரிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 1974 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று 66 பேரைக் கொன்ற டிரேசி சூறாவளியின் வேதனையான நினைவுகளை டார்வினில் வசிக்கும் சுமார் 140,000 பேருக்கு ஃபினா சூறாவளி மீண்டும் கொண்டு வந்துள்ளது.