வங்கதேசத்தில் இன்று (நவ.21) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பூகம்ப பீதியால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை 10.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவானது. நர்சிங்டி மாவட்டத்தின் மாதாபடி என்ற பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக வங்கதேசத்தின் டாக்கா, சந்த்பூர், நில்பாமரி, சிட்டகுண்டா, சிராஜ்கஞ்ச், நாாயண்கஞ்ச், படுவாகாலி, போக்ரா, பாரிசல், மவுல்விபசார் ஆகிய பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. சில வினாடிகளுக்கு இந்த நிலநடுக்கம் நீடித்தது.
இதனால், பீதி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்தும், தாங்கள் பணிபுரியும் இடங்களில் இருந்தும் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக பழைய டாக்காவின் ரூப்கஞ்ச், நாராயண்கஞ்ச் ஆகிய பகுதிகளில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ரஃபிசுல் இஸ்லாம் (20), அப்துர் ரஹீம் (48), அப்துல் அசிஸ் ரிமோன் (12), பாத்திமா (10), காஜம் பூயான் (75) ஆகியார் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி கட்டிடங்களில் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், நிலநடுக்கம் காரணமாக பீதி அடைந்து வெளியேற முயன்றுள்ளனர். ஒரே நேரத்தில் பலரும் வெளியேற முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மிட்ஃபோர்டு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் நர்சிங்டி நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தை அடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், "நிலநடுக்கத்தை அடுத்து நிலைமையை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பாதிப்புகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு அதிகபட்ச முன்னுரிமையை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தீ அணைப்புப் படையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர். தவறான தகவல்கள் அல்லது வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். நாட்டு மக்கள் அனைவரின் பாதுகாப்பில் அரசு உறுதியாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இந்தியாவிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. குறிப்பாக, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா மாநிலங்களில் கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பதற்றம் அடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள் இருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் கூச் பெஹார், தக்ஷின், உத்தர் தினாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. குவாஹாட்டி, அகர்தலா, ஷில்லாங் உள்ளிட்ட நகரங்களிலும் நில அதிர்வு வலிமையாக உணரப்பட்டுள்ளது.